அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன. நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகின்றன.
குளிர் அதிகரிப்பதால் மின்சார தேவை அதிகரித்து உள்ளது. ஆனால், பனிப்பொழிவால் மின் கட்டமைப்பு முடங்கி உள்ளதால், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, கடந்த நான்கு நாட்களாக சுமார் 34 லட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மின்தடை காரணமாக பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. சாலைகளில் பனிக்கட்டிகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அங்கு பனி அதிகரித்து வரும் நிலையில் கடும் குளிருக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்சாஸ் மாநிலத்திற்கு அவசர உதவிகளை உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
டெக்சாசில் இவ்வாறு பனிப்பொழிவு அதிகரித்ததற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆர்டிக் பகுதிகளில் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக இந்த அசாதாரண பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் வானியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும் இது குறித்து ஒரு முடிவுக்கு வர நீண்ட கால ஆய்வு முடிவுகள் தேவை என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.