சுவிஸில் தஞ்சம் புகுந்துள்ள தமிழரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது தூதுவரிடம் கூட்டமைப்பு கோரிக்கை.
சுவிஸில் தஞ்சம் புகுந்துள்ள தமிழரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது தூதுவரிடம் கூட்டமைப்பு கோரிக்கை.
சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்பக்கூடாது என இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று யாழ். தனியார் விடுதியில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலே உலக நாடுகளின் நிலைப்பாடுகள் முக்கியமாக 47 நாடுகளின் நிலைப்பாடுகள் தொடர்பிலே மிக முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் 30/1 34/1 40/1 தீர்மானங்களுக்கு மேலதிகமாக இப்போது வரப்போகின்ற தீர்மானம் இலங்கைக்கு என்ன படிப்பினையைக் கொடுக்கும் அல்லது எவ்வாறு இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இவற்றைவிட தொல்பொருள் திணைக்களங்களின் ஊடான நிலப் பறிப்புக்கள் வனவள திணைக்களத்தின் ஊடான நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அரசினுடைய மத்திய அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களை வைத்து மக்களின் நிலங்களை மட்டும் அல்லது அவர்களின் இருப்புக்களையும் இலங்கை அரசு கேள்விக்குறியாக்குவது தொடர்பாகவும், இதுவரை தமது சொந்த இடங்களுக்குச் செல்லாத மக்களது விடயங்கள் தொடர்பாகவும், அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக சிறையில் இருக்கின்ற நிலமைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மேலும், சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்பக்கூடாது என்பதற்கான எழுத்து மூல கடிதத்தை நாங்கள் சுவிஸ் தூதுவரிடம் கையளித்தோம். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். எமது மக்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கடந்த ஒன்றரை வருடங்களாகத் தாங்கள் கையாளவில்லை என்றும், தற்போதும் அவ்வாறான எண்ணம் தமக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்” என்றனர்.