பருத்தித்துறையில் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியைக்குக் கொரோனா!
பருத்தித்துறையில் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியைக்குக் கொரோனா!
யாழ்.வடமராட்சி, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியையின் வீட்டில் அண்மையில் திருகோணமலையில் இருந்து உறவினர்கள் வந்து தங்கியிருந்துள்ளனர்.
இவ்வாறு தங்கியிருந்த உறவினர்கள் திருகோணமலைக்குத் திரும்பிய நிலையில் அங்கு ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உறவினரது வீட்டுக்குச் சென்று வந்திருந்தமை தெரியவந்தது.
இந்தத் தகவல் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, குறித்த ஆசிரியை குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே ஆசிரியைக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை பருத்தித்துறையிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிப்பவர் என்று தெரியவந்துள்ளது.