விஜய குமாரதுங்க, (1945-1988) கொலை – ஹேமந்த வர்ணகுலசூரிய
1988 பெப்ரவரி 12ல் விஜய குமாரதுங்க, எச்.ஆர்.ஜோதிபால நினைவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் பங்கேற்றார், அதில் அவர் எச்.ஆர்.ஜோதிபால மாவத்தயை திறப்பதாக அறிவித்தார். நான் ஒருபோதும் கேட்டிராத அவரது உணர்ச்சிமிக்க உரைகளில் ஒன்றை அவர் அதில் ஆற்றினார். ஜோதிபாலவுடனான தனது நட்பினைப்பற்றி அவர் மிக நீண்ட நேரம் பேசினார், மற்றும் ஒரு நடிகராக தான் ஜோதிபாலவின் குரல் வளத்தால் எப்படி ஆதாயம் அடைந்தார் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
ஜோதிபாலவின் பின்னணிப் பாடல்கள் மூலமாக தான் பெரிதும் பிரபலம் அடைந்த உண்மையையும் அவர் ஏற்றுக்கொண்டார். பார்வையாளர்களாக கலந்துகொண்டிருந்த அங்கத்தவர்களில் பலரும் அது கேட்டு கண்ணீர் விட்டார்கள். அந்தக் கூட்டத்தில் கூட பாதுகாப்பு பணியாளர்கள் பார்வையாளர்கள்மீது ஒரு அவதானமான கண் வைத்திருந்தார்கள். விஜய உடன் வந்திருந்த ஸ்ரீலங்கா மகாஜனக் கட்சியின் செயலாளர் பிரேமசிறி பெரேராவிடம் நான் ஏன் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறது என்று விசாரித்தபோது, ஜேவிபியின் ஆயுதக் குழுவான தேசப்பிரேமி ஜனதா விமுக்தி பெரமுனவினால் (டி.ஜே.வி) விஜயின் உயிருக்கு பயங்கர அச்சுறுத்தல் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பிரேமசிரியின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால் விஜயவைப் போன்ற ஒரு அப்பாவி மனிதருக்கு தீங்கிழைக்க ஜேவிபி விரும்பும் என்று நான் ஒருபோதும் எண்ணவில்லை. ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு விஜய கொலை செய்யப்பட்டார். முழு நாடுமே அவரது மரணத்துக்காக துக்கம் அனுட்டித்தது. அவரது மரணச்சடங்கில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். மகாஜனக் கட்சியில் இருந்த ஒவ்வொருவரும் அந்தக் கொலை ஜேவிபியின் ஆயுதக் குழுவான டி.ஜே.வியானால்தான் நடத்தப்பட்டது என நம்பினார்கள். ஆயுதக் குழுக்களை வைத்திருந்த சில இடதுசாரி அமைப்புக்கள் கொலைகள் மூலமாக பழிவாங்கல்களை மேற்கொண்டன.
மக்கள் புரட்சிகர சிவப்பு இராணுவம் (பி.ஆர்.ஆர்.ஏ) ஜேவிபிக்கு எதிராக ஆயுதத்தை தூக்கியபோது எனது உயிரும் ஆபத்தின் கீழ் இருந்தது, எனது பெயர் அவர்களது பட்டியலில் காலஞ்சென்ற ரஞ்சித் அபேசூரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருந்தது, ஏனென்றால் விஜேதாஸ லியனாராய்ச்சி என்கிற இளம் சட்டத்தரணியின் கொலைக்கு எதிராக நான் பிரச்சாரம் மேற்கொண்டதினால்தான். நான் ஒரு ஜேவிபி அனுதாபி என்று தவறாகக் கருதப்பட்டேன். விஜேயின் கொலைக்கு சில மாதங்களுக்குப் பின்னர் அவரைக் கொன்றதாகக் கருதப்படும் கொலையாளி கைது செய்யப்பட்டான். அப்போது ஐஜிபி ஆக இருந்த ஏணஸ்ற் பெரேராவை நான் சந்தித்தேன், அவர் அந்தக் கைதை உறுதிப்படுத்தினார். அந்த சந்தேக நபர் விஜய குமாரதுங்காவை மட்டுமல் மேலும் பலரையும் கொன்றிருப்பதாக அவன் ஒப்புக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அந்தக் கொலையாளி தெருவிலே வசித்து வந்ததாகவும் அதனால் அவன் ஜேவிபிக்கு ஒரு தாக்குதலாளியாக வேலை செய்துள்ளான் என்று அவர் சொன்னார். சந்தேக நபர் ஒரு நாட்குறிப்பு புத்தகத்தை பாவித்து வந்ததாகவும் அதில் தான் கொலை செய்தவர்களின் பெயரை அவன் குறித்து வைத்திருப்பதாகவும் மற்றும் அதில் விஜே என்று எழுதப்பட்டிருப்பது விஜய குமாரதுங்கவைத்தான் என்று என்னிடம் சொல்லப்பட்டது. சந்தேகநபரைக் கொல்வதற்கு பி.ஆர்.ஆர்.ஏ பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் சிஐடி உருவாக்கிய சிறந்த புலனாய்வாளர்களில் ஒருவர் என்று பெயர் பெற்ற சிஐடி பணிப்பாளர் சந்திரா ஜயவர்தனாவிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார். சந்திரா ஜயவர்தனா ஒரு தூய்மையான குணாதிசயம் கொண்டவர்.
கொலையாளி என்று சந்தேகிக்கப் படுபவரிடமிருந்து சந்திரா ஜயவாதனா ஒரு விரிவான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார் மற்றும் அது தட்டச்சு செய்யப்பட்ட 179 பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால் சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதின் பின்னர், விஜயின் கொலையில் ஐதேக ஒரு தொடர்பைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தார். மகாஜனக் கட்சி, சந்தேக நபரான பலமுலகே லயனல் ரணசிங்காதான் டி.ஜே.விக்காக இந்தக் கொலையை செய்ததாக நம்பியபோதிலும், சந்திரிகா இதனைச் செய்தார்.
விஜயின் கொலையை ஆராய்வதற்காக சந்திரிகா ஒரு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கத் தலைவரான டெஸ்மண்ட் பெர்ணாண்டோ சொன்னதைப்போல “இலக்கு அடையாளப்படுத்தப்பட்டு இலக்கைச் சுற்றி ஒரு வட்டம் வரையப்பட்டுள்ளது, எனவே ஆணைக்குழுவின் முழு முயற்சியும் ஐக்கிய தேசியக் கட்சியையும் மற்றும் ஐதேகவில் உள்ள பிரேமதாஸ குழுவினரையும் சிக்கவைத்து ஜேவிபியினை பழியில் இருந்து நீக்குவதாகவே இருந்தது”. விஜயவின் நண்பர்கள் என்னைச் சந்தித்து இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக ஆஜராகும்படி என்னை வற்புறுத்தினார்கள். “நான் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவே தோன்றவேண்டும்” என்று நான் அவர்களிடம் தெரிவித்தேன். அதிகம் பாதிக்கப்பட்டவராக நான் கருதியது விஜய அதிகம் நேசித்த அவரது தாயான பற்ரீஸ் குமாரதுங்கா என்று. தனது பரபரப்பான வேலைப் பளுவின் இடையில் கூட விஜய ஒவ்வொருநாளும் அவரது தாயைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிலநேரங்களில் அவருக்கு நேரம் கிடைத்தால் அவரது தாயிடம் வந்து அவருக்கு உணவு ஊட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது அவரது தாயின் மீது அவர் கொண்டிருந்த ஒரு அசாதாரணமான உறவாகும்.
நாங்கள் விஜயின் தாயாரான திருமதி. குமாரதுங்கவைச் சந்திப்பது என்று முடிவு செய்து அப்போது அவர் வசித்துவந்த பொல்ஹேன்கொடவுக்குச் சென்றோம். அப்போது என்னுடன் வந்திருந்த சரத் ஹோன்கககே மற்றும் தயான் ஜயதிலக ஆகியோரைக் கண்டதும் அந்தத் தாயின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர்கள் ஏன் ஜேவிபியை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்கள்? எனதருமை மகனைக் கொன்றது ஜேவிபி தான் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியுமே என்று அவர் சொன்னார்.
நீங்கள் சாட்சியமளிக்க விரும்புகிறீர்களா என்று நாங்கள் கேட்டபோது, ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளிக்கச் சிறந்த நபர் பிரேமசிறி பெரேராதான் என்று தெரிவித்த அவர் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், ஆனால் ஆணையாளர்கள் அவரது வீட்டுக்கு வந்தால் தான் பதில் சொல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் கிறுக்கலான எழுத்தில் ஆணைக்குழுவின் தலைவருக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதினார். அந்த குறுகிய கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தது, “ எனது மகன் உயிரோடிருந்தபோது ஜேவிபிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், மற்றும் அவர் கொல்லப்படுவார் என்று பலமுறை அவருக்கு கடிதங்கள் கிடைத்திருந்தன” என்று. ஆணைக்குழு பிரேமசிறி பெரேராவுக்கும் அழைப்பு விடுத்தது. பிரேமசிறி ஒரு கொலையாளியைப் போலவே நடத்தப்பட்டார், அவர் அணிந்திருந்த ஆடைகளைப்பற்றி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அவர்கள், அவர் அணிந்திருந்த செருப்புக்களைப் பார்த்து இகழ்ச்சியாகப் பேசினார்கள். அவர் பரிகசிக்கப்பட்டார் மற்றும் கேள்விகள் கேட்கப்பட்ட விதத்தினால் அவரால் பல கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை, இதனால் கடினமான சாட்சியை கூடத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிட்டது.
முன்னாள் சிஐடி பிரிவின் டிஐஜியான சந்திரா ஜயவர்தனா சாட்சிக் கூண்டில் ஏறியபோது அவருக்கு இன்னும் மோசமானது காத்திருந்தது. ஆணைக்குழு அவரை ஒரு பொதுவான குற்றவாளியைப் போலவே நடத்தியது மற்றும் கொலையாளியிடம் இருந்து அவர் பதிவு செய்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் முட்டாள்தனமானதும் நடைமுறைக்கு ஒவ்வாததும் என கருதப்பட்டது.
ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகள் யாவும் பிரேமதாஸ குழுவினருக்கு எதிரானதாகவே இருந்தன. அது நீதித்துறைக்கு ஒரு துக்கமான நாளாக இருந்தது. சந்திரா ஜெயவர்தனாவினால் பதிவு செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏராளமான விபரங்களைக் கொண்டிருந்தது மற்றும் அவை சாட்சியங்களால் உறுதி செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஆணைக்குழு அவை எதையும் கொடுக்கவில்லை. அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் 60ம் பக்கத்தில் விஜய எப்படிக் கொல்லப்பட்டார் என்று சந்தேகநபர் ரணசிங்கா பின்வருமாறு விளக்கியுள்ளார்: நாங்கள் பையை எடுத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு கடைக்கு அருகில் வந்தோம். மோட்டார் சைக்கிளை நிறுத்திய பின்னர், நாங்கள் வீதியை அவதானித்துக் கொண்டிருந்தோம், சுமார் ஐந்து அல்லது ஆறு நிமிடங்களின் பின்னர், விஜய குமாரதுங்க வீட்டுக்கு வெளியில் வருவதை நாங்கள் கண்டோம்.
அவர் தனியாக வந்து வாசலுக்கு அருகில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அந்த நபர் ஒரு சாரமும் சேர்ட்டும் அணிந்திருந்தார். அதன் பின்னர், ஹேரத்தும் நானும் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டோம். நான் பின் ஆசனத்தில் அமர்ந்தவாறே, அந்தப் பையை மடியில் வைத்து அதைத் திறந்து துப்பாக்கியை வெளியே எடுத்து அதன் பாதுகாப்பு ஆழியை விடுவித்தேன். நாங்கள் நிற்கும் இடத்துக்கு சுமார் இருபது யார் தூரத்தில் நாங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தினோம். விஜய குமாரதுங்க அவரது வெளி வாசலுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். அவர் சில ஆவணங்களையும் ஒரு கோப்பினையும் கையில் வைத்திருந்தார். அவர் அங்கு நின்றுகொண்டிருந்த நபருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது நான் ரி 56 ரக துப்பாக்கியை எடுத்து அவரது பின்புறத்தில் இரண்டுமுறை சுட்டேன். அவர் எனக்கு எதிராக நேரே நிற்கவில்லை. துப்பாக்கிச் சூடு அவர்மீது பட்டதும் அவர் நிலத்தில் விழுந்துவிட்டார். பின்னர் நான் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிச் சென்று அவரது தலையில் இரண்டுமுறை சுட்டேன். நான் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கியதும் விஜய குமாரதுங்கவுடன் பேசிக்கொண்டிருந்த நபர் வீட்டை நோக்கி ஓடினார். அப்போது அவரையும் நான் சுட்டேன். அங்கு ஒரு இரட்டை ஆசனம் கொண்ட வண்டி ஒன்று வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது அந்த வண்டியின் பின் பகுதியில் ஒரு மனிதன் அமர்ந்து இருந்தான். அவனையும் நான் சுட்டேன், மற்றும் ஒரு கோப்பில் இருந்த அவணங்கள் சில விஜய குமாரதுங்காவின் அருகில் கிடப்பதை நான் கண்டேன். அந்தக் கோப்பை நான் எடுத்து நிலத்தில் போட்டேன். பின்னர் நான் அங்கிருந்த நான் துப்பாக்கி கொண்டுவந்த பையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்தில் ஏறிக்கொண்டேன். நாங்கள் பொல்ஹேன்கொட நோக்கி மோட்டார் சைக்கிளைச் செலுத்தினோம்.
அந்த மனிதன் தெரிவித்த கிட்டத்தட்ட அனைத்தையும் சிஐடியினரால் உறுதிப்படுத்த இயலுமாக இருந்தது. அவர்கள் விஜயவின் கொலை தொடர்பான ஆதாரங்களை மட்டுமல்ல ஆனால் வேறு 14 கொலைகள் தொடர்பான ஆதாரங்களையும் கண்டுபிடித்திருந்தார்கள்.
பெப்ரவரி 16 2018ல் விஜயவின் 30வது மரண நிறைவு வருடத்தை நாம் அனுட்டிக்கிறோம், ஒருவேளை இந்த முழு நாடும் எப்போதும் மிகவும் உணாச்சிபூர்வமாக நேசித்த ஒரே அரசியல் தலைவர் அவராகத்தான் இருப்பார்.
நன்றி: தேனீ – மொழிபெயர்ப்பு:எஸ்.குமார்