‘கஷோக்ஜி கொலை : சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்தார் – அமெரிக்க புலனாய்வு அறிக்கை
சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஒப்புதலின் பெயரிலேயே 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பைடன் அரசு வெளியிட்ட இந்த அறிக்கையில், சௌதி இளவரசர் கஷோக்ஜியை “ஒன்று பிடிக்க அல்லது கொல்லும்” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக டஜன் கணக்கான சௌதி நாட்டவர்களுக்கு தடை விதித்த அமெரிக்கா, இளவரசர் மீது எந்த தடையும் விதிக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவின் அறிக்கையை “எதிர்மறையானது, தவறானது, ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டுள்ள சௌதி அரேபியா அதனை நிராகரித்துள்ளது.
தற்போது சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக செயல்படும் மொஹம்மத் பின் சல்மான், தன் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.
துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்திற்கு சென்றபோது, கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் உடல் துண்டாக வெட்டப்பட்டது.
59 வயதான ஜமால் கஷோக்ஜி 2017ஆம் ஆண்டில் தனது தாய் நாடான செளதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். இவர் சௌதி அரச குடும்பத்தின் தீவிர விமர்சகர்.
பிறகு அமெரிக்காவின் நாளிதழான வாஷிங்டன் போஸ்டில், இளவரசர் மொஹம்மத் மற்றும் அவரது கொள்கைகளை விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார்.
அமெரிக்காவின் அறிக்கை என்ன கூறுகிறது?
“துருக்கியில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்லும் திட்டத்திற்கு சௌதியின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக நாங்கள் மதிப்பிடுகிறோம்” என அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரக அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சௌதியின் அரசரான சல்மான் பின் அப்துலசீஸ் அல்-சௌதின் மகனான இளவரசர் மொஹம்மத் பின் சல்மான்தான் தற்போது அங்கு ஆட்சி செய்கிறார்.
சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சலமான் கஷோக்ஜியின் கொலைக்கு ஒப்புதல் அளித்தார் என்று கூறுவதற்கான மூன்று காரணங்களையும் அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் கட்டுப்பாடு அவருக்குதான் இருக்கிறது.
இளவரசர் சல்மானின் ஆலோசகர்களில் ஒருவரும் மற்றும் பல பாதுகாப்பு தகவல்களுக்கு உட்பட்ட சில உறுப்பினர்களும்தான் இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்டனர்.
வெளிநாட்டில் இருக்கும் எதிர்ப்பாளர்களை வன்முறையுடன் அடக்குமுறை செய்வதற்கு அவர் வழங்கும் ஆதரவு
கஷோக்ஜியின் கொலைக்கு பொறுப்பானவர்கள் என குற்றம்சாட்டப்படும் தனிநபர்களின் பெயர்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், “எவ்வளவு காலத்திற்கு முன்” அவர்கள் இதனை திட்டமிட்டனர் என்று தெரியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சௌதி – அமெரிக்கா உறவில் சிக்கல்?
அறிக்கை வெளியானதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன், சௌதி அரசர் சல்மான் பின் அப்துலசீஸ் அல்-சௌதியிடம் பேசினார்.
இந்த அறிக்கை வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே “கஷோக்ஜி தடை” என்ற பெயரில் ஒரு சில பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி ப்ளின்கென் அறிவித்தார்.
“கஷோக்ஜியின் கொலையில் நேரடியாக சம்மந்தப்பட்ட நபர்கள் தீவிர அதிருப்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக” அவர் குறிப்பிட்டார்.
மேலும், “எந்த ஒரு வெளிநாட்டு அரசின் அதிருப்தியாளர்களை இலக்காக வைக்கும் எந்த குற்றவாளிகளையும் அமெரிக்க மண்ணில் அனுமதிக்கக் கூடாது” என்றும் ஆண்டனி எச்சரித்தார்.
இந்நிலையில், சௌதி இளவரசருக்கு நெருங்கிய சில நபர்கள் மீதும் அமெரிக்க கருவூலத்துறை தடை விதித்துள்ளது. குறிப்பாக, இளவரசருக்கு நெருக்கமான முன்னாள் துணை புலனாய்வு தலைவரும், இந்த கொலையில் ஈடுபட்ட இளவரசரின் தனிப்பட்ட பாதுகாப்புப்படையில் ஒருவரான அஹமத் அசிரி மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சௌதி அரேபியா, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி.
சௌதி சட்டங்கள் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட, தற்போதைய அதிபர் ஜோ பைடன், உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க புலனாய்வு அறிக்கையை படித்துவிட்டு வியாழக்கிழமை அன்று சௌதி அரசர் சல்மான் பின் அப்துலசீஸ் அல்-சௌதியிடம் தொலைப்பேசியில் பேசிய அதிபர் ஜோ பைடன், “சர்வதேச அளவில் மனித உரிமைகள் மற்றும் சட்டங்களுக்கு அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தி பேசினார்” என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
மேலும், சௌதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தங்களை ரத்து செய்ய பைடன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும், எதிர்காலத்தில் “பாதுகாப்பு” உபகரணங்கள் வழங்கும் ராணுவ விற்பனைகளை மட்டுப்படுத்தவும் யோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிப்பதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
சௌதியின் பதில் என்ன?
அமெரிக்காவின் அறிக்கையை மறுத்த சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், கஷோக்ஜி கொலைக்கு காரணமானவர்கள் சரியாக விசாரிக்கப்பட்டு, நீதி வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.
“கஷோக்ஜியின் கொடூரமான கொலையை சௌதி வன்மையாக கண்டித்ததோடு, எங்கள் நாட்டின் தலைமையும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த பிறகும், இது போன்று நியாயப்படுத்தப்படாத தவறான முடிவுகள் இருக்கும் அறிக்கையை அமெரிக்க வெளியிட்டிருப்பது துரதிஷ்டவசமானது” என சௌதி வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
யார் இந்த கஷோக்ஜி?
செளதி அரேபியாவை சேர்ந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ஒரு பத்திரிகையாளராக கஷோக்ஜி பதிவு செய்திருக்கிறார்.
சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது முதல் அல் கய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் எழுச்சி வரை பல சம்பவங்களை பதிவு செய்தவர் கஷோக்ஜி.
1980 – 90 ஆகிய காலகட்டங்களில் பல முறை இவர் ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஜிகாதிகளின் சர்வதேச தலைவராக இருந்த அப்துல்லா அஜ்ஜாமை காப்பாற்றியவர் ஜமால் கஷோக்ஜி. ஒசாமா பின் லேடனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ஜமால் கஷோக்ஜி என்றும் முணுமுணுக்கப்பட்டது.
செளதியின் விவகாரங்கள் குறித்து காத்திரமாக எழுதும் செய்தியாளராக பார்க்கப்பட்டார் ஜமால்.
ஒரு பத்திரிகையாளராக மட்டும் கசோக்ஜி இல்லை. பல தசாப்தங்களாக செளதி அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராக ஜமால் கஷோக்ஜி இருந்திருக்கிறார். அவர்களின் ஆலோசகராகவும் செயலாற்றி இருக்கிறார்.
2017ஆம் ஆண்டு செளதி அரச குடும்பத்துக்கும் கஷோக்ஜிக்கும் முரண்பாடு ஏற்பட்டது.
அவர் செளதியை கடுமையாக விமர்சித்தார். அதன் முடி இளவரசரை ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பிட்டார்.
அதற்கு பின்பு அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.
சௌதி இளவரசர் மொஹம்மதை விமர்சித்து வாஷிங்டன் போஸ்ட் இதழில் கஷோக்ஜி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.
வாஷிங்டன் போஸ்டில் தாம் எழுதிய முதல் கட்டுரையில், செளதியில் இருந்தால் தாம் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் துருக்கியை சேர்ந்த ஹெடிஸ் செஞ்சிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்ய ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டிருந்தார். அதற்கு கஷோக்ஜியின் முதல் திருமணத்தின் மணமுறிவு சான்றிதழ் அவசியம்.
இதனை பெறவே இஸ்தான்புலில் உள்ள செளதி அரேபியா தூதரகத்திற்கு சென்றார் ஜமால்.
முதலில் செப்டம்பர் 28ஆம் தேதி சென்ற அவரை அக்டோபர் 2ஆம் தேதி வந்து சான்றிதழை பெற்றுகொள்ள வலியுறுத்தினர் அதிகாரிகள்.
அக்டோபர் 2ஆம் தேதி சென்ற அவர் அதன்பின் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.
செளதி தூதுரகம் செல்லும் போது இரண்டு தொலைபேசிகளை ஹெடிஸ் செஞ்சிஸிடம் கொடுத்து, ஒரு வேளை நான் திரும்பவரவில்லை என்றால் துருக்கி அதிபர் எர்துவானின் ஆலோசகருக்கு அழைக்க சொல்லி இருக்கிறார்.
ஏறத்தாழ 10 மணி நேரம் தூதரக வாசலிலேயே காத்திருந்திருக்கிறார் ஹெடிஸ் செஞ்சிஸ்.
ஆனால் உள்ளே சென்ற கஷோக்ஜி திரும்பி வரவேயில்லை.
A long-awaited declassified US intelligence report on the killing of journalist Jamal Khashoggi finds the Saudi Crown Prince approved the operation https://t.co/N3VXzq59xj pic.twitter.com/ekVIg9L9cl
— CNN (@CNN) February 26, 2021