யாழில் 51 கைதிகள் உட்பட வடக்கில் இன்று மட்டும் 61 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் இன்று ஒரே நாளில் 61 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 236 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 52 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள். 150 கைதிகளிடம் நேற்றுமுன்தினம் மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களிலேயே 51 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவரது கணவர் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராகக் கொழும்பில் பணியாற்றுவிட்டு வந்திருந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட 463 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையில் 9 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 நோயாளிகளுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கொடிகாமத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 81 வயது வயோதிபப் பெண்ணொவருக்கும் அவரது பேரனுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.