கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்.
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்.
ஒக்ஸ்போர்ட் – எஸ்ட்ராசெனீகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, இரண்டு நாட்களின் பின்னரும் காய்ச்சல் இருக்குமாயின், உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர், இருவர் மரணித்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவரினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக, அவர்கள் மரணித்தார்களா? என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அது குறித்து விரைவில் தகவல்களை சமர்ப்பிக்க முடியும்.
அதுவரையில், இந்த மரணங்களை, தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் நிகழ்ந்த மரணங்களாகவே கருதமுடியுமே தவிர, கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதனால் ஏற்பட்ட மரணங்கள் என்ற எண்ணப்பாட்டுக்கு வர முடியாது என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
தடுப்பூசிகளை செலுத்திக்கொள்பவர்களுக்கு, இரண்டு நாட்களுக்கு மேலாக கடும் காய்ச்சல் காணப்படுமாயின், அது தொடர்பில் கவனம் செலுத்தி, மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், காலதாமதமின்றி, பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கமானது அதிகரித்துள்ளது.
எனவே, அதனூடாக சில தாக்கங்கள் ஏற்படக்கூடும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.