நீங்கள் இலங்கை செல்ல உள்ளீர்களா? …. (அனுபவ பதிவு)
சுவிற்சர்லாந்தில் இருந்து பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு சென்ற நண்பரது அனுபவம்…….
அவர் சொல்லும் பிரதான விடயங்களை பார்க்கலாம் ….
01) முதலாவதாக நாம் இலங்கை செல்ல இலங்கை அரச அப்ரூவல் அல்லது அனுமதியை பெற வேண்டும்.
நீங்கள் இலங்கை குடியுரிமை அல்லது குடியிருப்பாளராக இருந்தாலும் உங்களால் முன் போல நேரடியாக இலங்கைக்கு செல்ல முடியாது. நீங்கள் இலங்கை செல்வதற்கு முன் அங்கு செல்ல அனுமதியை பெற வேண்டும்.
நீங்கள் செல்வதற்கான அனுமதியை நீங்கள் வாழும் நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக அல்லது இலங்கையிலுள்ள வெளிநாட்டு அமைச்சகத்தினூடாக (MFA) பெற வேண்டும்.
முதலில் நீங்கள் இலங்கைக்கு எப்படி செல்லலாம் என இலங்கை தூதரகம் அல்லது வெளிநாட்டு அமைச்சினூடாக விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தூதரமும் வெவ்வேறு முறைகளை கையாளலாம். நீங்கள் வாழும் நாட்டில் இலங்கை தூதரகம் ஒன்று இல்லை என்றால் இலங்கையில் உள்ள வெளிநாட்டு அமைச்சை தொடர்பு கொள்ளுங்கள்.
இங்கே நீங்கள் ஆரம்பத்திலேயே அரசின் தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்ல விரும்புகிறீர்களா அல்லது பணம் செலுத்தும் விடுதி (Hotel) தனிமைப்படுத்தலுக்கு செல்ல விரும்புகிறீர்களா என ஆரம்பத்திலேயே தெரிவிக்க வேண்டும்.
அரசு கொடுக்கும் இலவச தனிமைப்படுத்தல் முகாமில் ஒரு குறிப்பிட்ட சிலரையே பராமரிக்க முடியுமாக உள்ளது. அங்கே வெற்றிடம் இருந்தால் மட்டுமே அனுமதி தருவார்கள். அது முற்றிலும் இலவசமானது.
இலங்கைக்கு வருவதற்கு பெரும் தொகையானோர் பெயர்கள் ஏற்கனவே பதியப்பட்டுள்ளன. முதலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட பின்னரே பின்னால் வருவோருக்கு வர வாய்ப்பு உள்ளது.
இந்த இலவச தனிமைப்படுத்தல் முகாமுக்கு போகாமல் வருவதற்கு என்றால் நீங்கள் ஆரம்பத்திலேயே விடுதி ஒன்றில் பணம் கொடுத்து தனிமைப்படுத்தலுக்கு செல்வதாக தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் விடுதியில் தங்க போவதாக இருந்தால் உங்கள் விபரங்கள் அனைத்தையும் அவர்களுக்கு ஏற்கனவே தெரியப்படுத்த வேண்டும்.
அதாவது உங்கள் பெயர்கள் – எத்தனை பேர் – கடவுச்சீட்டு இலக்கம் – அடையாள அட்டை இலக்கம் – நீங்கள் எதற்காக இலங்கைக்கு செல்கிறீர்கள் என தெளிவாக குறிப்பிட்டு எழுதினால் உங்களுக்கு உடனடியாக அனுமதி கிடைக்கும். இது விடுதியில் தங்க நீங்கள் பணம் செலுத்தி பெறும் அனுமதியாகும்.
இந்த அனுமதி கிடைத்த பின்னர் CAA எனப்படும் சிவில் எவியேசன் ஒத்தோரிட்டியடமிருந்து (civil aviation authority / சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை) உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் வரும். அவர்களது அனுமதியும் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த 2 அனுமதிகள் இலங்கக்குள் நுழைய தேவை. இவை இரண்டும் பெற்ற பின்னரே இலங்கை வர அனுமதியுண்டு. இவற்றை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
02) அடுத்ததாக ஒரு விமான சீட்டை பெறுவது…..
விமான சீட்டை பெற இன்றுள்ள நிலையில் மேலே சொன்ன 2 அனுமதியும் தேவை. அவை இல்லாமல் விமான சீட்டு எடுப்பது சிரமம்.
நாம் ஆரம்பத்தில் ஒன்லைனில் டிக்கட்களை எடுக்கக் கூடியதாக இருந்தது. அவை இப்போது அதிக கட்டணமாக மாறியுள்ளது. எனவே ஒரு முகவரிடம் எடுப்பது லாபகரமாக உள்ளது.
முன்னர் 200 – 300 பேர் பயணித்த விமானங்களில் 20 -30 பேர்தான் பயணிக்கிறார்கள். எனவே அதனால் விமான கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
முன்னர் சுவிசிலிருந்து இலங்கை வர 1லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்வரை செலவானது. இப்போது ஆகக் குறைந்தது 1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இவை நாடுகள் மற்றும் விமான சேவைகள் நிலையில் மாறலாம். முன்னர் கிடைத்த கட்டணத்தில் டிக்கட் இப்போது கிடைக்காது.
03) டிக்கட்டை பெற்ற பின் PCR Test எடுக்க வேண்டும்…..
நீங்கள் விமானத்தில் பயணிக்க 96 மணித்தியாலங்களுக்குள் எடுத்த PCR Test மூலம் நெகடிவ் – அதாவது கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே உங்களால் விமானத்தில் பயணிக்க அனுமதிப்பார்கள். 96 மணி நேரம் கடந்து விட்டால் மீண்டும் எடுக்க வேண்டி வரலாம்.
சுவிசில் PCR Test எடுக்க 150 பிராங் (இலங்கை ரூபாய் 35 ஆயிரம் ) செலவாகிறது.
சில நாடுகளில் இலவசமாக பெறலாம். இது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். சில விமான டிக்கட்டில் PCR Test பணம் சேர்க்கப்பட்டும் உள்ளது. இவை மட்டுமல்ல சட்டங்களும் மாறுபடலாம். எனவே சரியாக விபரங்களை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இங்கே இன்னொரு முக்கிய விடயம் நீங்கள் பயணிக்கும் விமானங்கள் டிரான்சிட் ஆகி பயணிக்க வேண்டி வந்து வெளியில் அலைந்தால் கொரோனா தொற்றலாம் எனக் கருதி எயார்போர்ட் Hotel ஒன்றில் தங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அதை சற்று அவதானிக்க மறக்க வேண்டாம்.
நாங்கள் வரும் போது அபுதாபியில் ஒரு விடுதியில் தங்க வேண்டி வந்தது. அதற்கு 180 டொலர் ( இலங்கை ரூபாய் 35 ஆயிரம் ) கொடுக்க வேண்டி வந்தது.
எனவே நீங்கள் இவை குறித்து விமான சீட்டை பெறும் முகவரிடம் தெளிவான விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேலே சொன்ன அனுமதிகள் இருந்தால் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிப்பார்கள்.
டிரான்சிட்டில் கூட இந்த அனுமதி பத்திரங்களை பார்க்க வேண்டும் எனக் கேட்கலாம். எனவே அவற்றை கையில் வைத்திருங்கள்.
விமானத்தில் போதியளவு இடம் இருப்பதால் வசதியாக வரலாம்.
04) இலங்கைக்கு நாங்கள் பெப்ரவரியில் custom முடித்து வெயியே வந்த போது டியுட்டி பிரீ திறந்திருந்தது.
டியுட்டி பிரீயில் முன்போல பொருட்கள் வாங்கலாம்.
அதன்பின் நீங்கள் கொண்டு சென்ற பொதிகளை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுதிக்கு செல்ல தயாராகலாம்.
இக்காலத்தில் விமான நிலைய வங்கி மற்றும் பணம் மாற்றும் பகுதிகள் செயல்படுகின்றன. எனவே விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை மாற்றுவது பெரிய பிரச்சனை இல்லை.
நீங்கள் பணம் கொண்டு வராது காட் மூலம் பணம் பெற ATM வசதிகளும் உண்டு. ஒரு முறை இங்கே 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாக எடுக்க முடியும். எனவே பல முறை பணம் எடுக்க நேரிடலாம். அந்த சிரமம் இல்லாமல் கையில் பணம் கொண்டு வருவது இக் காலத்தில் பொருத்தமானது.
05) அடுத்தது உங்கள் தொலைபேசிக்கு சிம் கார்ட் ஒன்றை பெறுவது.
அந்த வசதிகள் விமான நிலையத்தில் உண்டு. நீங்கள் விடுதிக்கு சென்று சிம் கார்ட் ஒன்றை பெறுவது மிக சிரமமாகும்.
06) அதன்பின்னர் இராணுவத்தினர் விளக்கங்கள் தருவார்கள். விளங்காது போனால் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அங்கே அரச தனிமைப்படுத்தல் மற்றும் பணம் செலுத்தி விடுதிகளில் தனிமைப்படுத்த செல்வோரை பிரிந்து நிற்கச் சொல்வார்கள்.
அரச தனிமைப்படுத்தலுக்கு செல்வோருக்கான செலவுகளை அரசு செலுத்தும்.
விடுதி தனிமைப்படுத்தலுக்கு செல்வோருக்கு தாமாக விடுதிகளை தெரிவு செய்ய முடியாது.
எந்த விடுதியில் இடம் உள்ளதோ அங்குதான் செல்ல முடியும். இலங்கையில் எந்த விடுதி என சொல்ல முடியாது. அது கொழும்பு – கண்டி – அம்பாந்தோட்டை – சீகிரிய – நீர்கொழும்பு – அனுராதபுரம் இப்படி எங்கு இடம் உள்ளதோ அங்கு அழைத்து செல்வார்கள்.
விடுதிகளில் தனியொருவர் தங்க ஒருவருக்கு 1 2 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலுத்த வேண்டி வரலாம். இது ஒரு அறையில் தனியாக தங்குவதற்கான செலவு.
ஒரு அறையில் இருவர் தங்கினால் ஒரு நாளைக்கு 14 – 15 ஆயிரம் ரூபாய் ஆகலாம். இந்த பணத்தை செயார் பண்ணலாம். அதாவது பாதியாக பிரித்து செலுத்தலாம் ….
அதாவது 7 – 7.5 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு வரலாம்.
3 பேருக்கு ஒன்றாக தங்கவும் முடியும் என சிலர் சொன்னார்கள். அது குறித்து தெளிவில்லை. கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு 22 ஆயிரம் வரை ஆகிறது என சொன்னார்கள்.
தனியாக போவோர் இன்னொருவரோடு இணைந்து தங்க நினைத்தால் விமான நிலையத்தை விட்டு வெளியேற முன் முடிவு செய்து ஒருவரோடு பேசி தீர்மானியுங்கள். விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின் அதற்கு சாத்தியம் குறைவு.
நாங்கள் 2 பேரும் தங்கியதால் எங்களுக்கு 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டி வந்தது. அதாவது 2 லட்சம் அளவு செலவானது.
இரண்டு பேர் ஒரு அறையை பகிர்ந்து கொண்டால் 1 லட்சம் அளவு செலவாகும்.
06) விடுதிக்கு போன பின் அங்கும் PCR Test ஒன்று செய்கிறார்கள். அதற்கு எமக்கு 7500 ரூபாய் செலவானது. சில இடங்களில் மாறுபடலாம். சில இடங்களில் 11 -12 ஆயிரம்வரை எடுப்பதாக சொன்னார்கள்.
விடுதி மற்றும் PCR Testக்கு பணம் அல்லது காட் மூலம் பணம் செலுத்த முடியும்.
அங்கே எனது காட் வேலை செய்யவில்லை. சில நேரங்களில் இலங்கையில் அப்படி நடப்பதுண்டு. எனவே நான் விமான நிலையத்திலேயே பணம் எடுத்துக் கொண்டே வந்தேன். அதனால் பிரச்சனை இல்லை.
சிலரிடம் கையில் பணம் இருக்கவில்லை. கிரடிட் காட்டும் வேலை செய்யவில்லை. எனவே 24 மணி நேரத்துக்குள் உறவுகள் மூலம் பணத்தை கிடைக்க செய்ய நாங்கள் இருந்த விடுதியில் வாய்ப்புகளை வழங்கினார்கள். அது எல்லா இடத்துக்கும் பொருந்துமா தெரியாது.
நீங்கள் செலுத்தும் பணத்துக்கு அனைத்து வசதிகளும் சாப்பாடும் உண்டு.
விரும்பிய உணவுகளை விடுதியில் உள்ளோரிடம் கேட்டு பெறலாம். உதவிக்கு இருக்கும் இராணுவத்தினர் மிக நட்பாக இருப்பதால் அவர்களோடு பேசி உதவிகளை பெறலாம்.
சைவ உணவுகள் தேவையானோர் அப்படியான உணவுகளை பெறலாம்.
நாங்கள் இருக்கும் விடுதியில் 14 நாட்களும் உள்ள உணவுகள் குறித்த மெனு கொடுத்துள்ளார்கள்.
நாங்கள் அதிலுள்ள ஏதாவது ஒன்றை சாப்பிடுவதில்லை என்றால் முதல் நாள் சொல்லி எமக்கு விரும்பிய உணவு ஒன்றை கேட்டு பெறலாம்.
இங்கே அவர்களோடு கமினிகேட் (கருத்து பரிமாற்றம்) செய்வதிலேயே எமக்கான வசதிகள் இலவாகும்.
07) 12 நாட்களுக்கு பின் மீண்டும் ஒரு PCR Test செய்கிறார்கள். அதற்கு 7500 ரூபாய் செலவாகிறது.
அது நெகடிவ்வானால் வீட்டுக்கு செல்ல முடியும்.
அது பொசடிவ்வானால் உங்களுக்கு அரச வைத்தியசாலைக்கு அல்லது கொரோனா நோயாளர் உள்ள கொரண்டைன் சென்றருக்கு செல்ல வேண்டி வரும்.
– நண்பரது அனுபவ பகிர்விலிருந்து