ரஹ்மத் சமூகசேவை அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு.
கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி, இஸ்லாமாபாத் மற்றும் வீரமுனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரும் அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதில் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு குறித்த மாணவர்களுக்கான உபகரணப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நவ்பர் ஏ.பாவா, முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான பி.ரி.ஜமால்தீன், ஏ.சி.சமால்தீன், முஸ்லிம் காங்கிரஸ் மத்திய முகாம் அமைப்பாளர் நசார் ஹாஜியார் உள்ளிட்ட பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதற்கு முன்னர் அம்பாறை மாவட்டத்திலுள்ள வேறு சில பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் இவ்வமைப்பினால் வசதி குறைந்த குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்களுக்கு நீர்த்தாங்கிகளும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அஸ்லம் எஸ்.மௌலானா)