மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.அரசிடம் ஐ.தே.க.வலியுறுத்து.
“மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தி மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட தலைவி சாந்தினி கோன்காகே தெரிவித்தார்.
“மாகாண சபையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெண்கள் அமைப்பு நிறைவேற்றி இருக்கின்றது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதற்கான மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அரசு மாகாண சபைக்கு உரித்தான நிறுவனங்களின் நிர்வாகத்தை அரச அதிகாரிகளுக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டிய நிறுவனங்களை அரச அதிகாரிகளை நியமித்து, அரசுக்குத் தேவையான முறையில் இதன் நிர்வாகத்தை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. அதனால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதைத் தொடர்ந்தும் காலம் கடத்தாமல் விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் மாகாண சபையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றையும் கட்சியின் பெண்கள் அமைப்பு நிறைவேற்றி இருக்கின்றது. சர்வதேச பெண்கள் தினத்திலே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
2017ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 25 வீத கோட்டாவை அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். அதேபோன்றதொரு பிரேரணையை மாகாண சபையிலும் உள்வாங்க மாகாண சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் பிரேரித்திருக்கின்றோம்”என்றார்.