கிராண்ட்பாஸ் தீ விபத்தில் 50 வீடுகள் முற்றாக நாசம்!
கொழும்பு, கிராண்ட்பாஸ் – கஜிமாவத்தைப் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் தீ பரவியது என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பிரதேச மக்களும், பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கஜிமாவத்தைப் பகுதியில் நெருக்கமாக 250 வீடுகள் அமைந்துள்ள நிலையில் அவற்றில் 50 வீடுகளுக்குத் தீ பரவியது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத போதும், பெருமளவான பொருட்கள் தீயில் எரிந்து கருகியுள்ளன என்றும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.