பசறை விபத்து நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யுமாறு பணிப்புரை.

பதுளை பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று (20) இடம்பெற்ற பஸ் விபத்து, உரிய தரப்பினரின் கவனயீனம் மற்றும் தான்தோன்றித்தனமாக செயற்பாடுகள் காரணமாகவே இடம்பெற்றுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யுமாறு, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில், பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வினவிய அவர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் குறித்த வீதி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தை எடுத்துள்ள நிறுவனம் ஆகியவற்றையும் விசாரணையில் உள்வாங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
விபத்துக்கு உள்ளான பிரதான வீதியின் குறித்த இடத்தில், கடந்த நவம்பர் மாதம் முதலே கல் காணப்படுவதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், அவ்விடத்தில் எந்தவோர் அறிவுறுத்தல் பலகையோ அல்லது அறிவுறுத்தல் வழங்கக்கூடிய நிபர்களோ நிறுத்தப்பட்டிருக்கவில்லை.
அத்துடன், பள்ளமொன்று காணப்படுவதால், அதற்கான அறிவுறுத்தல் பட்டிகள் கூட அவ்விடத்தில் நிறுவப்பட்டிருக்கவில்லை.
அதனால், பஸ் சாரதியின் கவனக்குறைவைப் போன்றே, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் குறித்த வீதி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்றிருக்கும் நிறுவனம் ஆகியவற்றின் பொறுப்பற்றச் செயற்பாடுகள் காரணமாகவே, இவ்வாறான விபத்தொன்று சம்பவித்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், அவ்விரு தரப்பினரையும் விசாரணைகளில் உள்வாங்குமாறும் அவர்கள் தரப்பிலிருந்தும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறும், செந்தில் தொண்டமான் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ்ஸின் பாகங்கள், உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதும் அந்த பஸ், பயணிப்பதற்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்பதும் கண்டறயப்படவில்லை.
தவிர, அளவுக்கு அதிகமாக வேகத்திலேயே பஸ்ஸை அதன் சாரதி செலுத்தியுள்ளார் என்றும் இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால், குறித்த தனியார் பஸ் உரித்துடைய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள செந்தில் தொண்டமான், மேற்படி தரப்பினருக்கு எதிராக, நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.