பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை.
பசறை லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாகாண போக்குவரத்து ஆணையகம், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் ஆளுநரின் நிதியத்திலிருந்து இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பசறை, லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் சரிந்து வீழ்ந்துள்ளகல்லை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறும், மாகாணத்தினுள்ளே மேலும் இதுபோன்ற அபாயகரமான இடங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் இந்த கோரச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் உத்தரவிட்டார்.
அதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாகாண போக்குவரத்து ஆணையகம், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் ஆளுநரின் நிதியத்திலிருந்து இழப்பீடுகளை வழங்கவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மேஜர் சுதர்ஷன டெனிபிடிய, சாமர சம்பத் தசநாயக, பசறை மற்றும் லுணுகலை பிரதேச சபைகளின் தலைவர்கள், ஊவா மாகாண பிரதான செயலாளர் ப.டீ. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் திரு. நிஹால் குணரத்தன, உள்ளாட்சி ஆணையர் மங்கல விஜயநாயக, பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிடல் ஆலோசகர், மாகாண போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
(இக்பால் அலி)