இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரில் விளையாடுகின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் புனேவில் நடக்கின்றன. முதல் போட்டி வருகிற 23-ந்தேதியும், 2-வது போட்டி 26-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந்தேதியும் நடக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் புதுமுக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஆல்-ரவுண்டர் குர்ணல் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் சூர்யகுமார் யாதவும் இடம்பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் உள்ளனர். இருவரும் இதுவரை ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளனர்.
2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஷிங்டன் சுந்தர் இலங்கைக்கு எதிராகவும், 2020-ம் ஆண்டு டிசம்பரில் டி.நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அறிமுகமானார்கள்.
திருமணத்துக்காக விடுமுறையில் சென்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் காயத்தால் விலகிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய அணி வருமாறு:- விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா (துணை கேப்டன்) ஷிகர் தவான், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்ட்யா, ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், சாகல், குல்தீப் யாதவ், குர்ணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்.