வர்த்தநிலையங்களை முற்றுகையிட்ட அதிரடிப்படை போலி நாணயத்தாள்கள் பறிமுதல்!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து போலியான ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது போலியான நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வியாபார நிலையம் ஒன்றினை சோதனை செய்த போது ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வியாபார நிலையத்தில் கடமையாற்றிய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பிரதேசத்தில் இன்னும் போலி நாணயத்தாள்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்திலும், இதனுடன் தொடர்புபட்ட வியாபாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவான நிலையில் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிய இளைஞரே கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வாழைச்சேனை இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நிந்தவூர் அட்டப்பள்ளத்திலுள்ள தோப்புக்கண்டம் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சடித்தவர்கள் என மூவர் ஒலுவில் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே ஓட்டமாவடியில் மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.