ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலை?
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவாதம் இன்றும் நாளையும் இடம் பெற்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அங்குள்ள நிலை இலங்கைக்கு பாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் மொத்த உறுப்பினர்கள் மற்றும் வாக்களிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 47 ஆகும், இதில் ஆசிய-பசிபிக் நாடுகளில் 14 நாடுகளும் ஆப்பிரிக்காவின் 13 நாடுகளும் அடங்கும். லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன, கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கூடுதலாக, மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ஏழு நாடுகள் மனித உரிமைகள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
உறுப்பினர்களில் பெரும்பான்மையானவை மூன்றாம் உலக நாடுகள், இருப்பினும், அந்த நாடுகளில் பெரும்பான்மையானவர்கள் , தீர்மானத்திற்கு ஆதரவாகவும் , இலங்கைக்கு எதிராகவும் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளன.
இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், யு.என்.எச்.ஆர்.சியின் இறுதி முடிவில் வலுவான செல்வாக்கை செலுத்த முடியாது, ஏனெனில் யு.என்.எச்.ஆர்.சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திவாய்ந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது.
தற்போது, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஒரு சில ஆசிய நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளன. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் எந்த நாடும் இலங்கையை ஆதரிக்க வாய்ப்பில்லை, கியூபாவும் நிகரகுவாவும் , தற்போது லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன.
ஜப்பான் மற்றும் தென் கொரியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது விலகும் சாத்தியம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் , இந்தியா இலங்கையுடன் இணைந்து பக்கபலமாக இருந்தால், அது பல நாடுகளின் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும், ஏப்ரல் தொடக்கத்தில் நடக்கவிருக்கும் தமிழக மாநிலத் தேர்தல்களை கருத்தில் கொண்டு , இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாது விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது. இந்தியா எப்படியாவது இலங்கையை ஆதரித்தால், அது தமிழ்நாட்டில் தேர்தல்களில் போட்டியிடும் பாஜக சார்பு குழுவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், அங்கு ஒரு தமிழ் பெரும்பான்மை உள்ளமையே இதற்கு காரணமாகும்.
ஜெனீவா வாக்கெடுப்புக்கு முன்னதாக முஸ்லீம் நாடுகளை குறிவைத்து ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்தனர், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நேற்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் அவர்களோடும் உரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.