ஆயிரம் ரூபாவுக்கு எதிரான மனு மீது 26இல் விசாரணை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தன.
மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நெருக்கடி நிலையில் நடத்திச் செல்லப்படுகின்ற பெருந்தோட்ட நிறுவனங்களை அரசின் வர்த்தமானி காரணமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவில் தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.