சந்தாங்கேணி மைதானத்தில் 170 மில்லியன் நிதியில் உள்ளக விளையாட்டரங்கு; பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி.
கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில், விளையாட்டுத்துறை அமைச்சின் 170 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவிருக்கின்ற உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை அடுத்த சில தினங்களில் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மத்திய பொறியியல் நிபுணத்துவப் பணியகத்தின் (சி.ஈ.சி.பி.) உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று திங்கட்கிழமை (22) மாலை, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் சகிதம் இம்மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்டு இப்பூர்வாங்க ஏற்பாடுகளைக் கவனித்தனர்.
இதில் கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.எச்.ஏ.ஹலீம் ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வீ.உதயகுமரன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவி வகித்த எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, இவ்வேலைத்திட்டத்திற்கான நிதியொதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்ததுடன் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் அடிக்கல் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அஸ்லம் எஸ்.மௌலானா)