“அசுரனுக்காக மதிப்புமிக்க தேசிய விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தனுஷ்
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான, தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்ட நிலையில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், மொத்தம் 7 விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளது. சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் தனுஷ் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு இதே வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் தேசிய விருதைப் பெற்றார். தேசிய விருது வென்றவர்களுக்கு தற்போது சமூக வலைதளங்களில் பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தேசிய விருது வென்றது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அசுரனுக்காக மதிப்புமிக்க தேசிய விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறந்த நடிகருக்கான விருதை வெல்வது ஒரு கனவு, தேசிய விருதை 2 முறை வென்றது மிகவும் ஆசீர்வாதத்திற்குரிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.
‘சிவசாமி’ என்ற கதாபாத்திரத்தை வழங்கியதற்காக வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அவருடன் சேர்ந்த பணியாற்றிய 4 திரைப்படங்களை நினைத்து பெருமை கொள்வதாகவும் தனுஷ் கூறியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தனக்கு எல்லையற்ற அன்பை வழங்கும் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.