பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் குறித்த பொறுப்பு ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு -ஜனாதிபதி தெரிவிப்பு.
➢ நிதி ஏற்பாடுகள் இருந்தும் ஆரம்பிக்கப்படாதுள்ள மற்றும் இடைநடுவே நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்களை உடனடியாக ஆரம்பியுங்கள்..
➢ அரச கொள்கையை அறிந்து அபிவிருத்தி திட்டங்களுடன் நேரடியாக இணைவது அதிகாரிகளின் பொறுப்பாகும்…
➢ மக்களின் பிரச்சினைகளை பரம்பரை பரம்பரையாக செல்ல இடமளிக்க வேண்டாம்..
➢ ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஜனாதிபதியுடன் சந்திப்பு…
பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் ஆளுநர்களும் மாவட்ட செயலாளர்களும் முன்னணியில் இருந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கிராமிய மக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை விரைவாக பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த நிகழ்ச்சித்திட்டங்களை ஒருபோதும் தாமதப்படுத்த முடியாது என்பதுடன், அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் கண்காணிக்கும் பொறுப்பு ஆளுநர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் ஒப்படைக்கப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
சில திட்டங்களுக்கு நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்தபோதும் அவை செயற்படுத்தப்படாது உள்ளன. சில திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன. இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்காக அரசாங்கம் பெருமளவு வட்டியை செலுத்தி வருகின்றது. இதனையிட்டு மக்கள் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் குறை கூறுகின்றனர். மக்களின் தேவைகளையும் மக்கள் அரசாங்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் விளங்கி, அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டு இதுவரையில் ஆரம்பிக்கப்படாது உள்ள மற்றும் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
தனி நபர் ஒருவரின் அல்லது ஒரு சிலரின் தவறு காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்படும் வகையில் சட்டங்கள் வகுக்கப்படக் கூடாது. மோசடிக்காரர்கள் மற்றும் மோசடி வர்த்தகர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வருவதற்கு தேவையான சட்டங்களை வகுக்க வேண்டுமானால் அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று உண்மையான மக்களின் பிரச்சினைகளை இனங்காண வேண்டும். எளிமையாக வாழ்ந்துவரும் அப்பாவி மக்களையும் திருடர்களாக பார்ப்பது கிராமத்திற்கு செல்லாத அதிகாரிகளே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது சுற்று நிரூபங்களுக்குள் மட்டுப்பட்டு இருக்காது அரச கொள்கையின் பிரகாரம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மக்களின் பிரச்சினை ஒன்றை முன்வைக்கின்றபோது மற்றுமொரு பிரச்சினையை காரணமாக வைத்து அதனை மூடி மறைக்க அதிகாரிகள் முயற்சிக்கக் கூடாது. மக்களின் பிரச்சினைகள் முன்வைக்கப்படும்போது கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் பார்த்து அவற்றை கைவிடக்கூடாதென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகள் பரம்பரை பரம்பரையாக செல்வதற்கு இடமளிக்கக் கூடாது. அரசாங்கம் அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் பொது மக்களுக்காகவே திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சுற்றாடல் அபிவிருத்தி உட்பட அனைத்து துறைகளிலும் மக்களை வாழ வைக்கும் பொறுப்புக்கு முன்னுரிமை அளித்திருப்பதாக தெரிவித்தார்.
கிராமிய பிரதேசங்களில் காணி பயன்பாடு முறையற்ற நிலையில் உள்ளது. இது குறித்து கிராம மக்களுக்கு தெளிவுபடுத்தி வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கான வழிகாட்டலை வழங்குவது முக்கியமானதாகும். சமூக வனச் செய்கை திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் சுற்றாடல் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வுகளை வழங்க முடியும். இது குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
சில தரப்பினரும் சில ஊடகங்களும் தெரிவிக்கும் வகையில் சுற்றாடல் அழிவு மாவட்ட மட்டத்தில் இடம்பெறுவதில்லை என்றும் அவை ஊடக காட்சிப்படுத்தல் மட்டுமே என்றும் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர்.
கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஒவ்வொரு மாதமும் ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு