ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை! – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு
“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிபெற்றுள்ளதன் மூலமாக இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”
– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எனவே, உள்நாட்டு விசாரணையை நடத்தியேனும் தீர்வைக் காணுமாறு அரசை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், வெளிநாட்டுப் பயணத் தடை, பொருளாதார கொடுக்கல் – வாங்கல்கள், ஏற்றுமதி – இறக்குமதி விடயங்களில் தடைகளை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் அக்கட்சி நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியுள்ளது.
“சர்வதேச விசாரணை அவசியமில்லை. ஆனால், உள்நாட்டு விசாரணைகளை நடத்தியேனும் தீர்வு காணுங்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த வாக்கெடுப்பு மூலமாக எமக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இராஜதந்திர ரீதியிலும், வெளிநாட்டு நட்புறவிலும் நாம் தோற்றுள்ளோம் என்ற எச்சரிக்கை ஐ.நா. தீர்மானம் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள நாம் தற்போது சர்வதேச இராஜதந்திர ரீதியிலும் பலவீனம் கண்டுள்ளோம்.
இலங்கையின் பிரஜைகளை வெளிநாட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தவும் அவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை ஏற்படுவதற்கும் நாம் விரும்பவில்லை.
இலங்கையின் பொருளாதார கொடுக்கல் – வாங்கல்கள், ஏற்றுமதி – இறக்குமதி விடயங்களில் எந்தவொரு தடையும் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. ஆனால், தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் இந்தக் காரணிகள் அனைத்துமே சவாலுக்கு உட்படும் விடயமாக மாறியுள்ளது.
நாம் என்ன செய்ய வேண்டும் என வெளிநாட்டவர் எமக்குக்கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தேசிய ஆணைக்குழுக்களின் மூலமாக பொறிமுறை ஒன்றை உருவாக்குவோம். உள்ளகப் பொறிமுறை மூலமாக நாம் சரியாகச் செயற்பட்டால் சர்வதேசத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படும்” – என்றார்.