இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது! கெஹலிய கருத்து
ஐ.நா. தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடிய நிலைமை இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று கருத்துக்கள் வெளியாவது குறித்து, இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்டப் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் சபையால் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது. அது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையிலேயே தீர்மானிக்க முடியும்.
எவ்வாறாயினும் பொருளாதாரத் தடை வரையில் இந்த விடயம் கொண்டு செல்லப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
இதேவேளை, பாதுகாப்புச் சபையில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் இருக்கும் நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.
தனிப்பட்ட ரீதியில் மட்டும் பொருளாதாரத் தடைகள் குறித்து நாடுகளுக்குத் தீர்மானம் எடுக்க முடியும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது மனித உரிமைகள் பிரகடனத்துக்கு முரண்பாடானது என்ற நிலைப்பாட்டிலேயே அரசு இருக்கின்றது. இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பதிலளிப்பதற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம்” – என்றார்.