தமிழ் மக்களுடன் உறவை ஏற்படுத்தும் சிந்தனை கோட்டாவுக்கு இல்லை! சுரேஷ் சுட்டிக்காட்டு.
“போரின் பின்னர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருவதன் ஊடாக அவர் தெளிவான செய்தியைச் சொல்கின்றார். வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசின் உதவி ஒத்தாசை கிடைக்கும் என்றும், இவ்வாறான குடியேற்றங்கள் இனி இங்கு நிகழத்தான் போகின்றன என்பதையும் மறைமுகமாகச் சொல்கின்றார்” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை ஊடகப் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியா மாடவட்டத்தின் சிங்களக் கிராமத்துக்கு இன்று வருகை தருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:-
“கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டது முதல் தான் ஒரு சிங்கள – பௌத்த மேலாதிக்க சிந்தனையில் இயங்குபவன் என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றார். அதன் ஒரு கட்டமே அவரின் வவுனியாவின் சிங்களக் கிராமத்துக்கான வருகை.
போரின் பின்னர், தமிழ் மக்களின் பரம்பரைக் காணிகளை பிடித்து உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமமே கலாபோகஸ்வௌ.
போரால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எத்தனையோ தமிழ் கிராமங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவை எவற்றுக்கும் செல்லாமல், சிங்களக் கிராமம் ஒன்றுக்கு கோட்டாபய செல்கின்றார்.
தமிழ் மக்களுடன் நல்லெண்ணத்தை வளர்ப்பது என்பது அவரது அகராதியில் கிடையவே கிடையாது. சிங்கள – தமிழ் மக்களுடன் ஓர் உறவை ஏற்படுத்தும் சிந்தனையும் அவருக்கு கிடையாது.
சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் ஊக்குவிப்பதற்கும், அவ்வாறு குடியேறியவர்களுக்கு அரசின் உதவி ஒத்தாசைகளை வழங்குவதுமே அவரது பயணத்தின் நோக்கமாக இருக்கின்றது. அவர் இதன் ஊடாக சிங்கள மக்களுக்கு சொல்லும் செய்தியும் அதுதான்.
தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஒரு துரும்பும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது என்பதுதான் அவரின் நோக்கம்” – என்றார்.