கல்முனையில் பிணக்குகளை தீர்ப்பதற்கு மாநகர இணக்க சபை.
கல்முனை மாநகர சபைக்கு பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளுக்கு துரிதமாக தீர்வுகளை வழங்கும் பொருட்டு மாநகர இணக்க சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழும் நகர அபிவிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழும் சூழல், சுற்றாடல் அதிகார சபை சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழும் மற்றும் எழுத்திலாலான ஏனைய சட்டங்களின் கீழும் மாநகர சபைக்கு உரித்தாக்கப்பட்ட விடயதானங்களில் எழுகின்ற பிணக்குகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கல்முனை மாநகர சபைக்கு தற்போது அதிகம் கிடைத்து வருகின்றன.
எனினும் இவ்வாறான முறைப்பாடுகளுக்கு உரிய காலத்தில் விரைவாக தீர்வுகள் கிடைக்கப் பெறுவதில்லை என பொதுமக்கள் அதிருப்தியான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
எனவே, மேற்கூறிய முறைப்பாடுகளை ஆராய்ந்து, பிணக்குகளை தீர்த்து வைப்பதற்காக கல்முனை மாநகர சபையினால் அதன் அலுவலர்களைக் கொண்டு மாநகர இணக்க சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த இணக்க சபையானது மாதத்தின் 02ஆம், 04ஆம் சனிக்கிழமைகளில் பிணக்குகளுடன் சம்மந்தப்பட்ட பகுதிக்குரிய கிராம சேவகர் மற்றும் வட்டார உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் கூடி, முறைப்பாடுகளை விசாரித்து குறிப்பிட்ட பிணக்குகளுக்கு தீர்வுகளை வழங்கி வருகின்றது என- அவர் மேலும் தெரிவித்தார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)