உள்ளூராட்சி சபை போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான ரஹீமின் மறைவு பேரிழப்பாகும்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கான போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான சிவில் சமூக செயற்பாட்டாளர் அப்துர் ரஹீமின் திடீர் மறைவு இப்பிரதேசத்திற்கும் கல்முனைப் பிராந்திய மீனவர் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (06) காலமான பிரபல வர்த்தகரும் மீனவர் சமூகத் தலைவரும் சமூக சேவையாளருமான ஏ.அப்துர் ரஹீம் அவர்களின் மறைவு குறித்து மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
போட் ரஹீம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற இவர் கல்முனைப் பிராந்திய மீனவர்களின் நலன்களில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வந்ததுடன் அவர்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் முன்னின்று உழைத்து வந்துள்ளார். குறிப்பாக கடந்த சுனாமி அனர்த்தத்தினால் தமது உறவுகளையும் இருப்பிடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து நிர்க்கதிக்குள்ளான மீனவர்களுக்கு நிவாரணங்களையும் மாற்று வீடுகளையும் பெற்றுக் கொடுப்பதில் இவர் அர்ப்பணிப்புடன் பாடுபட்டிருந்ததை மீனவர் சமூகம் ஒருபோதும் மறந்து விடாது.
அவ்வாறே சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையொன்று வேண்டுமென 2006ஆம் ஆண்டு முதல் மறுமலர்ச்சி மன்றம் முன்னெடுத்து வந்த போராட்டங்களில் அப்துர் ரஹீம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்ததுடன் மீனவர்களை அணிதிரட்டி அப்போராட்டங்களை வலுப்பெறச் செய்வதற்கு முக்கிய பங்காற்றியிருந்தார்.
இப்போராட்டங்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க முன்வராத அக்காலகட்டங்களில் அப்துர் ரஹீம் போன்ற ஒரு சிலரே மிகவும் துணிச்சலுடன் எமக்கு பக்கபலமாக இருந்து, உரமூட்டினர். அரசியல் ரீதியாக திணிக்கப்பட்ட அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் எமது செயற்பாட்டாளர்கள் சோர்வடைய நேரிட்டாலும் போராட்டத்தை கைவிடாமல் முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்து எமக்கு உத்வேகம் தந்திருந்தார்.
மேலும், இப்போராட்டங்களுக்கு பள்ளிவாசலின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கும் அதன் பிரதிபலனாக 2017ஆம் ஆண்டு பள்ளிவாசல் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நவம்பர் புரட்சியிலும் அவர் முக்கிய பங்காற்றியிருந்தார்- என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.