மணிவண்ணனின் கைது ஓர் அரசியல் பழிவாங்கல் -நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் எம்.பி. சீற்றம்.
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணனின் கைது ஓர் அரசியல் பழிவாங்கல் என்றே தோன்றுகின்றது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ். மாநகர சபை மேயர் மணிவண்ணன் எமது கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். யாழ். மாநகர சபையின் காவல் படைக்குத் தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இள நீல சீருடை அணிபவர்களையெல்லாம் குற்றவாளிகளாகக் காட்டவே நீங்கள் முற்படுகின்றீர்கள். மணிவண்ணனின் கைது ஓர் அரசியல் பழிவாங்கல் என்றே தோன்றுகின்றது.
நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதளவுக்கு நாடு இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கின்றது. தமக்குப் பிடிக்காதவர்கள், எதிரானவர்கள் அடக்கப்படுகின்றனர்.
எனவே, அரசின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.