கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தாமதமடைய வாய்ப்பு.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களில் வருடாந்த இடமாற்றம் பெறத் தகுதியானவர்களுள் 05ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்காக கற்பிக்கும் ஆசிரியர்களினதும் ஜீ.சி.ஈ.சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களினதும் இடமாற்றங்களை அப்பரீட்சைகள் முடிவடையும் இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி திணைக்களத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் ஏனைய ஆசிரியர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித தடைகளும் இல்லையென அவர் தெரிவித்துள்ளதாகவும் மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைவாக தற்போது கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், வலயக் கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து மேற்படி மூன்று வகை வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்களை அவசரமாக
கோரியுள்ளது.
எவ்வாறாயினும் இம்மாதம் 19ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் இதன் காரணமாக முழுமையாக பிற்போடப்படக் கூடிய வாய்ப்பிருப்பதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ஏ.எல்.முகம்மத் முக்தார் தெரிவித்தார்.
கொரோனா பிரச்சினை காரணமாக தாமதமடைந்த வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை இன்னும் பிற்போடுவதால் மிக நீண்ட காலமாக மாவட்டத்திற்கு வெளியே கடமையாற்றும் பல ஆசிரியர்கள், குறிப்பாக பெண் ஆசிரியைகள் பாதிக்கப்படுவர் என்பதனால் பதிலாள்களை வழங்கி எப்படியாயினும் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரை தாம் கோரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)