கொவிட் நோய்த் தொற்று பிரச்சினைக்கு தீர்வு தடுப்பூசி : அரசாங்கம் அதற்குத் தயார்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு. – ஜனாதிபதி தெரிவிப்பு….

கொவிட் 19 நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்த சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட் நோய்த் தொற்று பரவிய முதல் சுற்றின்போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ள அனைத்து சட்டதிட்டங்கள், வழிகாட்டல்களை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார தாபனம் தற்போது அங்கீகரித்துள்ள மற்றும் எதிர்காலத்தில் அங்கீகாரம் வழங்க உள்ள கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளில் நான்கு தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் கொண்டுவரப்பட்ட அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி 925,242 பேருக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் மே மாதம் முதலாம் வாரத்தில் வழங்கப்படவுள்ளது. முன்னணி சுகாதார அதிகாரிகள், கொவிட் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 356,000 பேருக்கு இரண்டாவது கட்டம் வழங்கப்படும். எஞ்சிய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி உற்பத்தி செய்யும் உலகில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் அரசாங்கம் தற்போது கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி 200,000 ஏப்ரல் மாதம் இறுதியிலும் 400,000 தடுப்பூசிகள் மே மாதத்திலும், 800,000 தடுப்பூசிகள் ஜூன் மாதத்திலும் 1,200,000 தடுப்பூசிகள் ஜூலை மாதத்திலும் கொண்டு வரப்படும். 13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அன்பளிப்பாக சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 600,000 செனோபாம் தடுப்பூசிகள் எதிர்வரும் சில வாரங்களில் உலக சுகாதார தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் நாட்டு மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரச ஔடத கூட்டுத்தாபனம் பைசர் தடுப்பூசியை கொண்டு வருவதற்கு தேவையான ஆரம்ப உடன்படிக்கைகளில் தற்போது கைத்சாத்திட்டுள்ளதுடன், அவற்றை மிக விரைவில் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கொவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை ஒழிப்பதில் முக்கிய இடம் வகிப்பது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதாகும் என உலக சுகாதார தாபனத்தின் தலைவர் நேற்று ஜெனிவாவில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உரிய முறையில் முகக் கவசங்களை அணிவது, சவர்க்காரம் அல்லது தொற்று நீக்கிகளை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல், தேவையற்ற பயணங்கள் மற்றும் விழாக்கள் போன்றவற்றில் இருந்து தவிர்ந்து இருப்பது இவற்றில் முக்கியமானதாகும்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது, ஒழுக்கப்பண்பாடான சமூக நடத்தைகள், வைரஸ் தொற்றை தடுப்பதற்கு சிறந்த தீர்வாகும் என்பது அநேக நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமான அனுபவமாகும்.

கொவிட் 19 பிரச்சினைக்கு தீர்வாக சிலகாலம் நாட்டை மூடி வைக்க வேண்டுமென சிலர் எண்ணுகின்றனர். ஆரம்ப காலகட்டங்களில் அத்தகைய நடைமுறையின் மூலம் திருப்தியான பெறுபேறு கிடைக்கப்பெற்றபோதும் நீண்டகாலத்தில் அது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார செயற்பாடுகளை முற்றாக முடக்கிவிடக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு செய்ய முடியாது. எமது நாட்டின் வருமானம் ஈட்டும் பெரும்பான்மையானவர்கள் ஒழுங்குபடுத்தப்படாத வாழ்வாதார வழிகளில் தங்கியுள்ளனர்.

எனவே அரசாங்கம் தனது பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மக்களும் நாட்டினதும் தம்முடையதும் நலனைக் கருத்திற்கொண்டு தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave A Reply

Your email address will not be published.