சிவில் நிர்வாகத்திற்கு உதவ நேரம் வந்துவிட்டதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவிப்பு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307 ஆக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 லட்சத்து 82 ஆயிரத்து 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 1 லட்சத்து 97 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு வெளிநாடுகளும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இதற்கிடையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய ஆயுதப்படையில் இருந்து உதவிகளை பெறுவது தொடர்பாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சிவில் நிர்வாகத்திற்கு உதவ நேரம் வந்துவிட்டதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபின் ராவத் அறிவிப்பில்,
பாதுகாப்பு படையினர் ஒரு அசாதார சூழ்நிலையில் வழக்கத்தை விட சிறப்பாக செயல்படவும், சிவில் நிர்வாகத்திற்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவவும் நேரம் வந்துவிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் சரியான நேரத்திலான உதவி முக்கியமானது.
சீருடையில் இருக்கும் நமது ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்போதுமே ஒவ்வொரு முறையும் தடைகளை உடைத்து எப்போதும் கூடுதல் தொலைவு செல்ல விருப்பமும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. நம்மால் முடியும், நாங்கள் செய்வோம். நாம் இன்னும் பயணிக்க நீண்ட தொலைவு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.