கல்முனை மாநகர சபை உத்தியோகத்தரைத் தாக்கிய வர்த்தகர் குற்றவாளி எனத் தீர்ப்பு.
கல்முனை மாநகர சபையின் வருமான பரிசோதகரைத் தாக்கி, அரச கடமைக்குக் குந்தகம் விளைவித்த சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருதைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
கடந்த 2018-10-29 ஆம் திகதி கல்முனை மாநகர சபையின் வருமான பரிசோதகர்கள், சாய்ந்தமருது பிரதேசத்தில் வியாபார அனுமதிப் பத்திரம் தொடர்பிலான களப்பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தம் செய்யும் நிலையமொன்றின் உரிமையாளரினால் வருமான பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் அவ்வுத்தியோகத்தரினால் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவ்வர்த்தகர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த நபர் குற்றவாளி என இன்று வெள்ளிக்கிழமை (30) தீர்ப்பளிக்கப்பட்டது.
Aslam S.Moulana