கொடிகாமம் வர்த்தகர்கள் நால்வர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்குக் கொரோனா!
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் நால்வருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிப்பட்டவர்கள். மற்றொருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன்.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மானிப்பாயில் நிறுவன ஊழியர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் நிதி நிறுவன ஊழியர் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் உத்தியோகத்தர் ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டி சென்று திரும்பிய ஆசிரியர் ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” – என்றார்.