இளம் இயக்குநரின் படத்தில் நடிக்க ரஜினி விரும்புவதாக தகவல்.
அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் ஐதரபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்றுவருகிறது. கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுகொண்டிருக்கும் நிலையில் தெலுங்கானாவில் முழு லாக்டெளன் போடுவதற்கு முன் ஷூட்டிங்கை முடிக்கும் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது படக்குழு.
இந்த ஆண்டு தீபாவளிக்கு அதாவது வரும் நவம்பர் 4-ம் தேதி ‘அண்ணாத்த’ படத்தை ரிலீஸ் செய்ய தேதி குறித்துவிட்டது சன் பிக்சர்ஸ். அதனால் படத்தின் படப்பிடிப்பை மே 15-ம் தேதிக்குள் முடித்துத்தரவேண்டும் என இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ரஜினியும் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஐதரபாத்திலேயே தங்கி நடித்துவருகிறார். இந்நிலையில் ரஜினியின் போர்ஷன் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் மே 10-ம் தேதிக்குள் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘முத்து’ படத்துக்குப்பிறகு ஏராளமான நடிகர்கள் நடிக்கும் கிராமத்துக்கதையில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. ‘முள்ளும் மலரும்’ படம்போல ரஜினி நடிக்கும் அண்ணன் – தங்கை எமோஷனல் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்பு, மீனாவும் நடித்திருக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், பிரகாஷ்ராஜ், ஜார்ஜ் மரியான் ஆகியோர் சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள். காமெடிக்கு சூரி மற்றும் சதீஷ். வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகள் இந்த கடைசி ஷெட்யூலில்தான் படமாக்கப்பட்டுவருகிறது.
படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் சில தினங்களில் சென்னை திரும்பும் ரஜினி, சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் டப்பிங் பேசயிருக்கிறார். டப்பிங்கை முடித்துக்கொடுத்ததும் மே மாத இறுதியில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் ரஜினி.
‘கபாலி’ படத்தை முடித்ததும் அமெரிக்கா பறந்த ரஜினி அங்கே இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அந்த அறுவை சிகிச்சை நடந்து இப்போது ஐந்தாண்டுகள் ஆவதால் செக்அப்பிற்காக செல்கிறார் ரஜினி.
அமெரிக்கா சென்று திரும்பியதும் அடுத்தப்படத்துக்கான வேலைகள் தொடங்கும் எனத்தெரிகிறது. தற்போது தனது நெருங்கிய நண்பர்களிடம் ”இன்னும் ரெண்டு படங்கள் நடிப்பேன்” என்று சொல்லியிருக்கும் ரஜினி அடுத்தப்படத்தை மீண்டும் சிறுத்தை சிவாவுக்கேத் தரயிருக்கிறார் என்கிறார்கள். சமீபத்தில் நடிகர் விஜய்யைவைத்து படம் தயாரித்து வெற்றிபெற்ற நிறுவனத்துக்குத்தான் ரஜினியின் 167 படத்துக்கான கால்ஷீட் இருக்கும் என்கிறார்கள். இந்தப்படத்துக்கு அடுத்து ஒரு இளம் இயக்குநரின் படத்தில் நடிக்கவும் ரஜினி விரும்புவதாகத் தெரிகிறது.