பூமியை நோக்கித் திரும்பி வரும் ராக்கெட் குறித்து நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.
எங்கள் ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது – சீனா
சீனா கடந்த வாரம், லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்தின் அடிப்படை பகுதியை எடுத்துச் சென்ற அந்த ராக்கெட், அப்பணி முடிந்தபின் சிதைவடைந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், ஒரு பெரிய சீன ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்திருப்பதாகவும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் இந்த வார இறுதியில் பிரவேசிக்கும் என தெரிவித்திருந்தது. குறிப்பிட்ட சீன ராக்கெட்டின் எடை 22 டன்கள் என்பதால், இத்தகவல் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் நிருபர்களிடம் இதுகுறித்து கூறுகையில், ‘பூமியை நோக்கித் திரும்பி வரும் ராக்கெட் குறித்து நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.
அந்த ராக்கெட் சிதைவுகள், பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததுமே பெரும்பாலும் எரிந்து போய்விடும். அதன் பாகங்கள், எந்த வான்வெளி செயல்பாடுகளுக்கோ, பூமிக்கோ பாதிப்பு, சேதத்தை ஏற்படுத்தாது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறையினர் அவ்வப்போது உரிய தகவல்களை அளிப்பார்கள்’ என்றார்.