நயினாதீவில் நடைபெறவிருந்த தேசிய வெசாக் விழா இரத்து! கொரோனாத் தொற்றே காரணம் என்கிறது அரசு.
யாழ். நயினாதீவு ரஜமகா விகாரையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த 2021ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பிரதான விழா இரத்து செய்யப்பட்டுள்ளது எனப் புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் அரச வெசாக் வைபவத்தை வேறொரு இடத்தில் நடத்தப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன குறிப்பிட்டார்.
எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை யாழ். நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வு இடம்பெறவிருந்தது. எனினும், கொரோனாத் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மிக அமைதியான முறையில் தேசிய வெசாக் நிகழ்வை கொண்டாட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்து.
இதற்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தனர்.
இந்தநிலையில், கொரோனாத் தொற்றின் தீவிரத்தையடுத்து நயினாதீவு தேசிய வெசாக் நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.