கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக தேவாலயங்களை வழங்க தேசிய கிறிஸ்தவ மன்றம் தீர்மானம்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அதிகரிப்புடன் ஏற்பட்டுள்ள சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமது தேவாலயங்கள் மற்றும் கட்டடங்களைத் தனிமைப்படுத்தல் மையங்களாகப் பயன்படுத்த முடியும் என்று இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தோடு தங்கள் தேவாலயங்கள் மற்றும் மையங்களைத் தடுப்பூசி திட்டங்களை முன்னெடுப்பதற்கு வழங்கவும் தயாராக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அன்றாட நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் அனைத்து மக்களையும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் ரெவ். எபினேசர் ஜோசப் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் தினசரி ஊதியம் பெற்று வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
இதேவேளை, வெளிநாடுகளில் பணிபுரியும் ஏராளமான இலங்கையர்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாது சிரமப்படுகின்றனர். செலவு குறைந்த தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகும்.
நாட்டுக்கு அதிகமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தந்து நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த இவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அனைத்து அமைப்புகளும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
அத்தோடு நாடு இந்த இடரிலிருந்து மீண்டுவர அனைவரும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.