ஆபத்தான நிலையில் இலங்கை! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.
“புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசு சரியான முடிவுகளை எடுப்பது மிகவும் அவசியமாகும்.”
இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் தரம் வாய்ந்த கொரோனாத் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை முடிந்தவரை விஸ்தரிக்க வேண்டும்.
தற்போது இலங்கையில் பரவி வரும் வைரஸ் முன்னைய வைரஸை விடவும் மிகவும் தீவிரமானது. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு 4 முதல் 5 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளியாகின்றன. எனவே, அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா சுகாதார விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
புதிய வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் நுரையீரலைக் கடுமையாக பாதிப்பதுடன், தீவிரமான நிமோனியாவை ஏற்படுத்துகின்றது. அதனால் குருதி உறைவு ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.
இந்தக் கட்டத்தில் நோயாளிக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். அத்தோடு ஒட்சிசன் மற்றும் தீவிர சிகிச்சையும் நோயாளிக்கு அவசியமாகின்றது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எமது நாட்டில் உள்ள சுகாதார வளங்களைக் கொண்டு அதிகமானவர்களுக்கு சிகிச்சை வழங்குவது மிகவும் கடினமானது.
எனவே, இதனை இலகுவாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்” – என்றார்.