இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் பலி.இருவர் படுகாயம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று மாலை பெரியகல்லாறிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியை கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த பேருந்து மோதி தள்ளியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான அழகப்பர் மதிராஜ்(49வயது) என்பவர் உயிரிழந்ததுடன் அவரது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.