சீனாவின் புதிய விண்வெளி சாதனை: சுரொங் ரோவரை செவ்வாயில் தரையிறக்கியது.
அமெரிக்கா மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த செவ்வாய் கோள் ஆராய்ச்சியில் இப்போது சீனாவும் காலடி வைத்துள்ளது. சீனா வெற்றிகரமாக தன் சுரொங் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கிவிட்டதாக, அந்நாட்டின் அரசு ஊடகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
ஆறு சக்கரங்களைக் கொண்ட சுரொங் ரோவர், செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் பெரிய நிலப்பரப்பான உடோபியா பிளானிடியா என்கிற இடத்தை இலக்கு வைத்து இருக்கிறது. இந்த ரோவர் வாகனம், பாதுகாக்கும் கேப்ஸ்யூல், பாராசூட், ராக்கெட் தளம் போன்றவைகளைப் பயன்படுத்தி செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது.செவ்வாயில் தரையிறங்குவது மிகவும் கடினமானது என்பதால், சீனாவின் சுரோங் ரோவரின் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை அமெரிக்கர்கள் மட்டுமே செவ்வாய் கோளில் தரை இறங்குவதில் அதிக அனுபவம் பெற்றவர்களாக இருந்தார்கள். தற்போது சுரொங் ரோவர் தரை இறங்கியதால், செவ்வாயில் ரோவரை களமிறக்கிய இரண்டாவது நாடு என்கிற பெருமையை சீனா பெற்றிருக்கிறது.
சீன அதிபர் ஷி ஜின்பிங், சுரொங் ரோவர் அணியினரின் சாதனையை தனி செய்தி மூலம் பாராட்டினார்.
“இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் போதுமான தைரியத்தோடு இருந்தீர்கள், உங்கள் பணியில் சிறந்து விளங்கினீர்கள், கோள்களை ஆராயும் நாடுகள் பட்டியலில் நம் நாட்டை முன்னேற்றம் காண வைத்திருக்கிறீர்கள்” என அவர் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
அதிகாரபூர்வமாக இந்த விண்களம், பெய்ஜிங் நேரப்படி சனிக்கிழமை காலை 7.18 மணிக்கு தரையிறங்கியதாக அந்நாட்டின் அரசு ஊடகம் கூறுகிறது.
சுரொங் ரோவரின் சோலார் பேனல்கள் விரிவடைய 17 நிமிடங்களானது. அதன் பிறகு தான் புவிக்கு சுரொங் ரோவர் சமிக்ஞை அனுப்பியது.
சுரொங் என்றால் நெருப்புக் கடவுள் என்று பொருள். இந்த ரோவரை சுமந்து சென்ற டியான்வென் 1 என்கிற சுற்றுவட்டக் கலன் பிப்ரவரி 1ஆம் தேதி செவ்வாய் கோளைச் சென்றடைந்தது.
அப்போதிலிருந்து இந்த விண்கலம் மிகத் தெளிவான புகைப்படங்களை எடுத்து, சுரொங் ரோவர் தரையிறங்குவதற்கான பாதுகாப்பான இடத்தை கண்டறிய உடோபியா பகுதியை ஆராய்ந்து வந்தது. சீன பொறியாளர்கள், சுரொங் ரோவரை தரையிறக்கும் பணியை, ஒரு கால இடைவெளியோடு மேற்கொள்ள வேண்டி இருந்தது.
தற்போது புவிக்கும் செவ்வாய் கோளுக்கும் இடையிலிருக்கும் தொலைவு 320 மில்லியன் கிலோமீட்டர். அதாவது புவியில் இருந்து செவ்வாய்க்கு ரேடியோ அலைவரிசை மூலம் செய்திகள் சென்று சேரவே சுமார் 18 நிமிடங்கள் தேவைப்படும். எனவே, சுரொங் ரோவர் செவ்வாயில் தரையிறங்கும் அடுத்தடுத்த சிக்கலான பணிகள் அனைத்தும் தன்னிச்சையாக நடக்க வேண்டும். செவ்வாய் கோளின் சூழலுக்குள் நுழைவது, தரையை நோக்கி மெல்ல கீழிறங்குவது, தறையிறங்குவது என ஒவ்வொன்றாக நடக்கவேண்டியிருந்தது.
தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் டியான்வென் 1 கலனில் இருந்து சுரொங் ரோவர் பிரித்துவிடப்பட்டது. சுரொங் ரோவரை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் கேடயம் முதல்கட்டமாக வேகத்தைக் குறைத்தது. அதன் பின் ஒரு பாராசூட் திறக்கப்பட்டு மேலும் ரோவர் தரையிறங்கும் வேகம் குறைக்கப்பட்டது. கடைசியாக ஓர் ரோபாட் மூலம் ரோவர் செவ்வாயில் தரையிறக்கப்பட்டது.
இது மிகவும் சிக்கலான சவால், ஆனால் சீனா கடந்த சில ஆண்டுகளாகவே விண்வெளித் துறையில் தன் ஆற்றலை வெளிக்காட்டி வருகிறது. அதில் சமீபத்தில் நிலவில் இரண்டு ரோவர்களை தரையிறக்கியதும் அடக்கம்.
செவ்வாய் கோளில் தரையிறங்கி இருக்கும் சுரொங் ரோவரை, செவ்வாயின் நிலவியல் அமைப்புகளைக் குறித்து ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் குறைந்தபட்சமாக 90 செவ்வாய் நாட்களுக்காவது பயன்படுத்துவார்கள். செவ்வாயில் ஒரு நாள் அல்லது ஒரு சோல் என்பது 24 மணி நேரம் 39 நிமிடங்களாகும்.
சுரொங் ரோவர் இயந்திரம், 2000ஆம் ஆண்டில் ஏவப்பட்ட நாசாவின் ஸ்பிரிட் அண்ட் ஆப்பர்சூனிட்டி வாகனத்தைப் போலவே இருக்கிறது. இதன் எடை சுமார் 240 கிலோகிராம். இதற்கான ஆற்றல் சூரியவிசைத் தகடுகளில் இருந்து கிடைக்கிறது.
ஓர் உயர்ந்த கம்பம் போன்ற அமைப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் படமெடுக்கவும், வழிகாட்டவும் முடியும். அதோடு ஐந்து கூடுதல் உபகரணங்கள் இந்த சுரொங் ரோவரோடு பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி செவ்வாய் கோளில் இருக்கும் பாறைகளைக் குறித்து ஆராயவும், நிலத்தடியில் நீரினாலான பனிக்கட்டிகள் இருக்கின்றனவா எனவும் ஆராய முடியும்.