நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை அதிகாலை நான்கு மணியுடன் தளர்வு.
இந்த நிலையில் , தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய , நாளைய தினம் முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் .
இதற்கமைய , அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள் , ஒற்றை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும் .
அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை இரட்டை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள் , இரட்டை இலக்க திகதிகளில் வெளிச்செல்ல முடியும் . பூச்சியம் எனின் அது இரட்டை எண்ணாக கருதப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
நாளைய தினம் 17 ஆம் திகதி என்பதனால் , அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டவர்கள் மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
இந்த முறைமையை மீறுகின்றவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார் .
எவ்வாறாயினும் , அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
தொழிலுக்கு செல்பவர்கள் இந்த முறைமையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை . ஏனைய செயற்பாடுகளுக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக அடையாள அட்டை முறைமையை பின்பற்ற வேண்டும் .
நாளை ( 17 ) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த முறைமை அமுலில் இருக்கும் .
அவ்வாறானால் , குறித்த 14 நாட்களில் , அடையாள அட்டை முறைமையின் அடிப்படையில் , ஒருவருக்கு 7 நாட்கள் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார் .