சுகாதார தேவைகளை கவனிக்கின்றது அரசு – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு.
இலங்கையில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளைப் போன்றே, பொதுமக்களின் ஏனைய சுகாதார தேவைகள் தொடர்பாகவும் அரசு கவனம் செலுத்தி வருகின்றது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அலரி மாளிகையில் குருநாகல் தேசிய வைத்தியசாலை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையின் மொத்த மக்கள் தொகையின் 10 சதவீதத்தினருக்கு சேவைகளை வழங்க முடியுமான விதத்தில் குருநாகல் வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகின்றது எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
குருநாகல், புத்தளம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நேரடியாகப் பயனடையும் வகையில் குருநாகல் வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பஸ்ஸில் வருகை தரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலை வளாகத்தினுள்ளேயே பஸ் நிலையம், கவர்ச்சிகரமான பசுமை கருத்தாக்கத்தின் கீழ் வைத்தியசாலை சூழல், போதனா வைத்தியசாலை மற்றும் சத்திரசிகிச்சை, சிறுவர் மற்றும் மகப்பேறு ஆகிய துறைகளில் உயர்மட்ட சேவைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.
வடமேல் மாகாண பிரதேச வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 2021 ஆண்டில் 602 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.