மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் பயணத் தடை விதிப்பதில் பயன் இல்லை ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு.
“பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் நாட்டைக் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீட்பதற்கு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.”
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே 25ஆம் திகதி (நாளை) பயணத்தடைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதே அன்றி, களியாட்டங்களுக்காக அல்ல.
நான் இன்று செயலகத்துக்கு வரும்போது வீதியில் அதிகமான வாகனங்களை அவதானித்தேன்.
நாட்டில் இன்று பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் எவ்வாறு இத்தனை வாகனங்கள் பயணிக்க முடியும்?
வைத்தியர்களின் வாகனங்களாக இவை இருக்க முடியாது. இவ்வாறானவர்களை நிறுத்தி விசாரிக்க வேண்டும்.
வைத்தியர் என்று போலியாக முத்திரைகளைப் பதித்துக்கொண்டு வாகனங்களில் பலர் பயணிக்கின்றனர்.
நாட்டு மக்கள் உணர்ந்து செயற்படத் தவறினால் பயணத் தடைகளை அமுல்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மரக்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவது குறித்து கிராம சேவகர்களுடன் இணைந்து திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளோம்” – என்றார்.