எக்ஸ் – பிரஸ் பேர்லில் பற்றிய தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள்.
பெரும்பாலான பகுதி எரிந்து நாசம்;
கடலுக்குள் மூழ்கும் நிலையில் கப்பல்
கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் ஏற்பட்டிருந்த தீ இன்று மாலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை – இந்தியக் கடற்படையினரின் கூட்டு நடவடிக்கை மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆனபோதும் கப்பலின் பெரும்பாலான பகுதி தீயில் எரிந்துள்ளதுடன், அதில் இருந்த கொள்கலன்கள் பலவும் எரிந்து கடலுக்குள் விழுந்துள்ளன.
கொழும்புத் துறைமுகத்தில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் கடந்த 20ஆம் திகதி இரவு கப்பலில் தீ பரவியிருந்தது. ஆரம்பத்தில் இலங்கை கடற்படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தபோதும், கடந்த 25ஆம் திகதி காலை கப்பலில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து கப்பல் முழுவதும் தீ பரவியிருந்தது.
இந்நிலையில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தியக் கடற்படையினரும் இலங்கைக் கடற்படையினரின் உதவிக்கு வந்திருந்தனர். இதன்படி இன்று மாலை தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கப்பலில் இருந்து தொடர்ந்தும் புகை வெளிவருவதால் மீண்டும் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் தீ ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கப்பலின் ஒரு பகுதி சாய்ந்தவாறு இருப்பதால் அது கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.