மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்கவாதி கொரோனாவால் உயிரிழப்பு!
நுவரெலியாவில் சிரேஷ்ட தொழிற்சங்க அரசியல்வாதியாகச் செயற்பட்டு வந்த தனுஸ்கோடி மாதவன் இன்று அதிகாலை காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 71.
இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது கொரோனாத் தொற்று உறுதியானது.
இந்தநிலையில், இவர் நுவரெலியா பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவு விசேட விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று நுவரெலியா மாவட்ட கொரோனாத் தடுப்புப் பிரிவின் பிராந்திய தொற்றியியல் பணிப்பாளர் மதுர செனிவிரத்ன தெரிவித்தார்.
நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அமரர் டி.மாதவன், ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாநிலப் பிரதநிதியாக 1976ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நன்மதிப்புப் பெற்றுச் செயற்பட்ட மூத்த தொழிற்சங்கவாதியாவார்.
நுவரெலியா, பதுளை மற்றும் ஹட்டன் போன்ற இடங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாநில பிரதிநிதியாகவும் தொழிலுறவு அதிகாரியாகவும் இவர் சேவையாற்றினார்.
1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக உலக தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
இஸ்ரேல், ஜப்பான், இந்தியா, மலேசியா,சிங்கபூர் உட்படப் பல உலகநாடுகளுக்குச் சென்று பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்ட இவர், வெளிநாடுகளுடன் விவசாயம் மற்றும் பெருந்தோட்டத் தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அணுகி வந்தவராவார்.
இவர் கடந்த 1992ஆம் ஆண்டு இ.தொ.கா. வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நுவரெலியா மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகர சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மூன்றாவது தடவையாக சுயேச்சையாகவும் போட்டியிட்டு மூன்றாவது தடவையும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இவர் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நுவரெலியா மாநகர சபையில் மூன்று தடவைகள் சிரேஷ்ட உறுப்பினராக இருந்து நுவரெலியா மக்களுக்குச் சேவை செய்துள்ளார்.
இவரின் பூதவுடல் நுவரெலியா மாநகர சபை பொதுத் தகன சாலையில் கொரோனா சட்டவிதிகளுக்கமைய இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.