புதிய சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணம் பிரதமருடன் சந்திப்பு!
நாட்டின் 48 ஆவது சட்டமா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம் அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (31) அலரி மாளிகையில் சந்தித்தார்.
சட்டமாதிபர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம் அவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம். வி எக்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பிலும், தீ பரவலினால் சமுத்திர வள சுற்று சூழல் பாதிப்பு தொடர்பிலும் முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்.
அதற்கான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்த சட்டமா அதிபர், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலான விசாரணை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு புதிய கட்டிடத் தொகுதியை வழங்கியமை தொடர்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த சட்டமா அதிபர், பழைய சட்டமா அதிபர் திணைக்கள கட்டிடத் தொகுதி தொல்பொருள் பழமையினை கொண்டுள்ளது. ஆகையால் அக்கட்டிடத் தொகுதியை புனரமைக்க அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கொலை வழக்கு தொடர்பில் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் போது ஆரம்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான தன்மை காணப்படாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர் இது குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடி உரிய தீர்வை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
பிரதமர் ஊடக பிரிவு