செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

சென்னை அருகே செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்எல்எல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன், உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் டி.எஸ்.சபரிஸ் மூலம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலையின் கடுமையான தாக்கம் காரணமாக நாட்டில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசிக்கான அவசியத் தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய 130 கோடி மக்களுக்கு 310 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவையாக உள்ளது. தற்போது வரை மக்களில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3.2 சதவீதம் மக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு 119 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவையாகவுள்ளது. அதேபோன்று, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 68.8 கோடி டோஸ்கள் மருந்து தேவை உள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 180 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவை உள்ளன. ஆனால், தற்போதுள்ள புள்ளி விவரங்களின்படி, ஒரு மாதத்தில் 7 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும் கொள்திறன் உள்ளது.
இதனால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பொதுத் துறை நிறுவனங்களையும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் புத்துயிரூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளது.
இந்தச் சூழலில் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படாமல் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை அரசு பயன்படுத்த வேண்டும். மத்திய அரசுக்குச் சொந்தமான, சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எச்எல்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்எல்எல் பயோடெக் நிறுவனம் (எச்பிஎல்) பல்வேறு சுகாதார கவனிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் முன்னணி வகித்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
உயிர் காக்கும் மருந்துகளையும் விலை குறைவான தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்வதற்கு சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசிகள் வளாகம் எனும் சர்வதேச தரத்திலான தடுப்பூசி வளாகத்தை அமைப்பதற்கு எச்எல்எல் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், இந்த வளாகம் தற்போது போதிய பணியாளர்கள் இன்றி உரிய வகையில் செயல்படாமல் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவுள்ள சர்வதேச தரத்திலான இயந்திரங்களைக் கொண்ட தடுப்பூசி தயாரிக்கும் இந்த நிறுவன வளாகம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த வளாகத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழக அரசுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆகவே, தற்போதைய கரோனா சூழலையும் தடுப்பூசிக்கான அதிகபட்ச அவசரத்தையும் கருத்தில் கொண்டு, இந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதே போன்று தடுப்பூசி தயாரிப்பதற்கான கொள்திறன் கொண்ட நிறுவனங்களைக் கண்டறியவும், மேலும் தாமதமில்லாமல் கரோனா தடுப்பூசியை தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.