கர்நாடகத்தில் ஜூன் 14 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா வியாழக்கிழமை அறிவித்தார்.
கர்நாடகத்தில் விதிமுடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக வியாழக்கிழமை மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாகத் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
முன்னதாக மே 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு ஜூன் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராதததைத் தொடர்ந்து ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுமுடக்க நீட்டிப்பில் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இதுவரை 26,35,122 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.