வெளிநாட்டிலுள்ளோர் அழைத்து வருவது இடைநிறுத்தம்
விமான நிலையத் திறப்பு – ஒத்திவைக்கும் சாத்தியம்
இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பது பெரும்பாலும் ஒத்திவைக்கப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கம்பஹாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, நாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதியளவான தங்குமிட வசதி இன்மையால், நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், வெளிநாட்டில் பணிபுரிபவர்களைத் திருப்பி அழைத்து வருவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
நாளை முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகின்றது எனவும், நாடு வழமையான நிலைமைக்கு வந்தவுடன் இது விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் சுமார் 12 ஆயிரம் பேர் இதுவரையில் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனவும், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய, வெளிநாடுகளிலுள்ள அனைத்து இலங்கைப் பணியாளர்களையும் அழைத்து வருவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
Comments are closed.