அரசு உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும்! – ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை.
நாட்டில் அனைத்து விடயங்களிலும் தோல்வியுற்ற அரசு, உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“நாட்டில் கொரோனாத் தொற்றின் தீவிரத்தால் பயணக் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாக அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் பயணக் கட்டுப்பாடுகளின்போது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசு தோல்வியுற்றுள்ளது.
தற்போதுவரை அதிகமான சந்தர்ப்பங்களில் அரசின் தோல்வி நிரூபிக்கப்பட்டுள்ளதால் மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத அரசு உடனடியாக இராஜிநாமா செய்வது மிகவும் உகந்தது.
பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகள் போன்ற அனைத்துத் துறைகளிலும் அரசு தனது இயலாமையைக் காட்டியுள்ளது.
அதனால்தான் தேல்வி அடைந்துள்ள அரசு உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.