பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரியுங்கள்! – ஜனாதிபதிக்கு மருத்துவ சங்கம் கடிதம்.
இலங்கையில் நாளாந்த பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சரியான தருணத்தில் பயணத் தடை விதிக்காமல் இருந்திருந்தால், நாட்டின் சுகாதாரத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நோயாளர்களை தரையில் வைத்து சிகிச்சையளிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளின் வினைத்திறன்மிக்க தன்மையை அதிகரிக்கும் படியும் இரண்டாம் டோஸ் வழங்குவதை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு நேரமொன்றை ஒதுக்கித் தருமாரும் இலங்கை மருத்துவ சங்கம் குறித்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.