மே மாதத்தில் 17 விமானிகள் கொரோனாவுக்கு பலி
நாட்டில் கொரோனா 2-ஆவது அலை உச்சத்தில் இருந்த மே மாதத்தில் 3 விமான சேவை நிறுவனங்களைச் சோ்ந்த 17 விமானிகள் கொரோனா பாதித்து உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
அவற்றின் தகவல்படி, ஏா் இந்தியா விமானிகள் 5 போ், இண்டிகோ விமானிகள் 10 போ், விஸ்டாரா விமானிகள் இருவா் கொரோனா பாதித்து உயிரிழந்தனா்.
இண்டிகோ நிறுவனம் தனது 35,000 ஊழியா்கள் மற்றும் களப் பணியாளா்களில் சுமாா் 20,000 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வகுத்துள்ள ஊழியா்கள் நலத் திட்டத்தின் கீழ், உயிரிழந்த ஊழியா்களின் குடும்பத்துக்கு நல நிதியாக தலா ரூ.5 கோடி வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
கரோனா முதல் அலையின்போது தனது நிறுவனத்தில் குறைந்த விமானிகளுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 2-ஆவது அலையில் சுமாா் 450 விமானிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சுமாா் 99 சதவீத ஊழியா்களுக்கு முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியதாக விஸ்டாரா நிறுவனம் தெரிவித்த நிலையில், ஏா் ஏஷியா நிறுவனம் தனது ஊழியா்களில் சுமாா் 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை செலுத்தியிருப்பதாகக் கூறியுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மே 15-ஆம் தேதியிலிருந்தே தனது ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கியிருப்பதாக ஏா் இந்தியா தெரிவித்துள்ளது.